பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 ★ இல்லம்தோறும் இதயங்கள்


ஒரே ஒரு சமயத்தில்தான் “கவலப்படாதீங்க அண்ணி! அண்ணன் இருக்கார். அதைவிட ஒங்களுக்குத் துணையாய் சந்திரன் இருக்கார்” என்றாள். முன்பெல்லாம், அவள் இப்படிப் பேசினால் ‘அடியே கள்ளி’ என்று கூறும் மணி மேகலை இப்போது வெட்டப்பட்ட கள்ளிச் செடிபோல் அவளைப் பார்த்தாள். ரமாவுக்கு பள்ளிப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கும் அவளுக்கு, இப்போது பாடங்களில் லயிக்க முடியவில்லை. தினமும் மாத்திரை சாப்பிடும் போது, அந்த குழந்தை ‘எனக்கும் சித்தி’ என்று சொல்லும் போது “இது ஒங்களுக்கு என்றைக்குமே தேவைப்படக் கூடாது” என்று சொல்லிவிட்டு புத்தகத்தை மூடுவாள்.

ஒருநாள், மணிமேகலை தற்செயலாக ஒரு பத்திரிகையைப் புரட்டினாள். அதில் ‘தொத்து வியாதிகளிலேயே அதிகமாகப் பரவும் வியாதி சோகந்தான். அதைச் சுமந்திருக்கும் முகத்தைப் பார்ப்பவர் உடலெங்கும் அது பற்றிக் கொள்ளும்’ என்று எழுதியிருந்தது. சில இலக்கிய வரிகள் ஒருவரது மனோபாவத்தை அடியோடு மாற்றும் என்ற கருத்துக்கு உதாரணம்போல் இருந்த அந்த வரிகளைப் படித்ததும் மணிமேகலை வரிக்குதிரை போல் நிமிர்ந்து நின்றாள். இப்போ என்ன நடந்துவிட்டது? விடுதலைப் போரில் வீரனாக, சிங்கமாக கர்ஜித்த சுப்பிரமணிய சிவாவுக்கு வரவில்லையா? ஆப்பிரிக்க நாட்டில் பெருவியாதிக்காரர்களுக்காகவே வாழ்ந்த ஆல்பர்ட் ஸ்வச்சருக்கு வரவில்லையா? எனக்கா? எனக்கா என்று சொல்லிக்கொள்வதில் என்ன அர்த்தம்? அந்த தியாகிகளைப் பார்க்கையில் நான் எம்மாத்திரம்? அதோட எனக்கு ஆரம்பந்தான். கிள்ளி எறியப்பட்டு வரும் வெறும் முளைதான்.

மணிமேகலை பழையவளாக மாற முயற்சித்தாள். பாதிக்குமேல் வெற்றி பெற்றாள். ரமாவுக்கு, சத்தம்