பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6 ★ இல்லம்தோறும் இதயங்கள்


 ரயில் பெட்டிக்குள் இருப்பவர்களைப் பார்ப்பதைவிட, இடிபடாமல் தப்பிப்பதையே பெரிய காரியமாக நினைத்தவர்கள் போல், நகர்ந்து நகர்ந்து தேடினார்கள். ரயில் பெட்டிகளுக்குள் இருந்தவர்களில் சிலர், குளிக்காமலே 'டிரஸ்' செய்துகொண்டார்கள். சில இளம் பெண்கள், அப்போதுதான் நிதானமாகப் பவுடர் போட்டார்கள். சில நடுத்தர வயதுப் பெண்கள், தங்கள் கழுத்துக்களை தற்செயலாகத் தடவுவதுபோல் தடவி, யாருக்கும் தெரியாமல், 'அஞ்ஞான வாசம்' செய்த நகைகளை எடுத்து, மேலே போட்டுத் தெரியப்படுத்திக் கொண்டார்கள். சில குழந்தைகள், அப்போதுதான், "ஒண்ணுக்கு ஒண்ணுக்கு" என்று அழுதன. வாசல் என்று நினைத்து, பாத்ரூமிற்குள் போன பாட்டிகளில் சிலர், இடறித் தடுமாறி, எனக்கு வழி பண்ணுங்க... வழி பண்ணுங்க... எனக்கு வழி விடுங்க டாப்பா. பாவிப்பய மவனுகளே... வழி விடுங்கடாப்பா..." என்று நெருக்கடியின் அடர்த்திக்கு ஏற்றபடி, குரலில் கடுமையைச் சேர்த்துக்கொண்டே கத்தினர்.

சில ரயில் காதலர்கள்-பேசக்கூடிய அளவுக்குப் பழகாமலும், பிரியக்கூடிய அளவுக்குக் கண்பார்வைப் பரிவர்த்தனையை, தடுக்காமலும் இருந்த அந்த இளைய தலைமுறையின் எரிகொள்ளிகள், வண்டியில் இருந்து இறங்க மனமில்லாமலே இறங்கிக் கொண்டிருந்தனர். அது 'ரிசர்வ்’ செய்யப்பட்ட கம்பார்ட்மென்ட் என்றாலும், மணியாச்சியில் ரயில் படுத்துக் கிடந்தபோது, மளமள வென்று ஏறிய வாடிக்கைகாரர்கள், இப்போது மளமள வென்று இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

இந்த அமளிக்குப் பங்காளியாகாதவள்போல், மணிமேகலை மட்டும், ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டு, ஒரு கையை ஜன்னல் விளிம்பில் ஊன்றி, அல்லிப் பூ மாதிரி குவிந்த கையில் மோவாயை ஊன்றிக்-