பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 ★ இல்லம்தோறும் இதயங்கள்


மெட்ராஸ் என்பதுபோல் வேகமாக நடந்து, பின் வீட்டில் உட்கார்ந்தாள்.

‘பைக்’ நகர்ந்தது. மணிமேகலையும், தெருவைப் பார்த்திருந்த ஜன்னலருகே நகர்ந்தாள். அவள் இருதயம் அந்த எஞ்ஜின் மாதிரி துடித்தது. வசந்தி தன் கவிழ்ப்புப் பார்வையை உரிமைக்காரியின் மீது வீசினாள். மணி மேகலை மறைந்து கொண்டாள்.

ஜெயராஜூம், வசந்தியும் சிரித்துக்கொண்டே போனார்கள். சற்று தொலைவில், அவன் திரும்பி அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே செல்வதும், அவளும் பதிலுக்கு எதையோ சொல்லிச் சிரித்துவிட்டு, தான் சாய்ந்திருக்கும் ஜன்னலையே பார்ப்பதும் மணிமேகலைக்குத் தெரிந்தது. அவளால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கணவனுடன் பைக்கிலும் பல இடங்களுக்குப் போயிருக்கிறாள். அநேகமாக மாலை சமயங்களாகத்தான் இருக்கும். சாலையில் ஆட்கள் கண்ணில் படாதபோது அவன் தன் முழங்கையை வைத்து அவளை இடிப்பான். அவள், அதற்குப் பயந்ததுபோல் தன் இடுப்புக்கு மேலுள்ள பகுதியை அவன் முதுகோடு இறுக்கிக்கொண்டு அவன் விலாவில் முகத்தை வைத்து உராசுவாள். அவரும்... இவள் கிட்டயும் அப்படி நடப்பாரோ? அவளும்... என்னை மாதிரியே... என்னை மாதிரியே...

மணிமேகலைக்குக் கண்ணீர் வரவில்லை. அளவுக்கு மீறித் துக்கம் வந்தால், கண்ணீர் வராதாம். அது துக்கத்துக்குப் பயந்து ஒதுங்கிக் கொள்ளுமாம். அவசரமாக வேலையிருப்பவர் போலவும், மனைவியிடம் அரைநிமிட நேரங்கடப் பேச அவகாசம் கிடைக்காமல் போனவர் போலவும், அறையை விட்டு வெளியேறியவர், அரைமணி நேரம் பேசிவிட்டுப் போகிறார். பேசிவிட்டு சும்மா