பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 87


போகவில்லை. வசந்தியுடன் போகிறார்! வசந்தி வரும் போதெல்லாம் ‘கவு கண்ணுப் பேய் வந்துட்டு. இவளைப் பார்த்துட்டு போற காரியம் உருப்பட்டாப் போலத்தான். அவளுக்கும், அவள் அப்பன் மாதிரியே புத்தி... அற்பப் புத்தி’ என்று முன்பு அடிக்கடி சொல்பவர்; தான் அவரது வாயை ‘அப்படிப் பேசக்கூடாது’ என்பது போல் கைவிரல்களால் மூடும் போதெல்லாம், அந்த விரல்களைக் கிள்ளி விலக்கிவிட்டு வாய்க்கு விடுதலை வாங்கி வார்த்தைகளை வெளியிடுபவர்; இப்போது அதே வசந்தியை, காலையில் வரச் சொல்கிறார். கவு கண்ணுப்பேய் சிட்டாகிவிட்டாள். அற்பப் புத்தி அற்புதப் புத்தியாகிவிட்டது. பேய் பின்னால் உட்கார்ந்துவிட்டது. தனக்குள்ளே சத்தம் போடுவதுபோல் விவாதித்துக் கொண்டிருந்த மணிமேகலை, வரவேற்பு அறையில் எஞ்சி யிருப்பவர்களின் பேச்சையும் காதில் வாங்கிக் கொண்டாள். லட்சுமியின் குரல் பலத்தது.

“ஓங்களத்தான் என்னை போற வழில எங்க வீட்ல விட்டுட்டுப் போங்க.”

“நான் கார்ல சோளிங்கர் போறேன்.”

“காருக்கு ஆசப்பட்டுத்தான் கேட்கேன். ஒங்கமேல ஆசப்பட்டுன்னு நினைக்காதிங்க.”

“ஒனக்கு வரவர வாய் அதிகமாவுது. இப்போ ஒப்பா வீட்ல என்ன பண்ணப் போற?”

“ஆயிரம் இருக்கும். நீங்க அவரைத் துரத்திட்டீங்க. ஆனால் நான் அவருகிட்டே பேசியாகணும். யாருகிட்ட மறச்சாலும் அவருகிட்ட மறைக்கப்படாது.”

“என்ன உளறுற!”

“ஒண்ணும் உளறல. கார்ல போகும்போது சொல்றேன்.”