பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 ★ இல்லம்தோறும் இதயங்கள்


பொண்ணுன்னா பொறுப்பியா? பாமாவுக்கு கன்னத்துல புள்ளி வந்தால் பொறுப்பியா? சீதாவுக்கு காலுல புள்ளி வந்தால் பொறுப்பியா? என் பொண்ணுன்னா ஒங்களுக்கு அவ்வளவு இளக்காரம்!”

“என்னடா சொல்ற?”

“பின்ன என்ன... இன்னைக்கி இவளுக்கு வந்திருக்கு; நாளைக்கு அவருக்கு வரும். ஒனக்கு வரும். தள்ளாத வயசுல மச்சானுக்கு வரும். இந்த வீட்டுக்கு வார எனக்குக்கூட வரும். விளையாடுறதுக்கு விளையாடணும்; விளையாடாததுக்கு விளையாடப் படாது!”

“என்ன பண்ணணுமுன்னு நீயே சொல்லேன்!”

“நம்ம குடும்பத்துல இருக்கிற எல்லாரும் டாக்டர் கிட்ட டெஸ்ட் பண்ணிக்கணும்.”

“இதோ வாராங்களே இவங்ககிட்ட சொல்லு. ஒருத்திக்கு வந்திருக்கது ஊருக்கே வருமுன்னு சொல்லு. ஒன் பேச்சைக் கேட்டிருந்தால் இந்த கதி வந்திருக்காது. இப்போ சொல்லியும் லாபமில்ல. சொல்லாமலும் லாபமில்ல.”

ராம—லட்சுமணர்போல் அங்கே வந்த சங்கரஜெயராஜ் சகோதரரில், மூத்தவன் “ஊர்ல. இருந்து எப்போ மாமா வந்திங்க?” என்று எடுத்துக் கூற, “வசந்திக்கு கல்யாணம் ஒழுங்காயிட்டுதா?” என்று இளையவன் தொடுத்துக் கூறினான். மருமகன்களின் உபசரிப்பு மாமனாருக்கு மிளகில் பப்பாளி விதையை கலப்படம் செய்து விற்கும்போது ஏற்படும் திருப்தியைச் சாதாரணமாக்கியது.

“பின்ன என்ன மாப்பிள்ளை. எதுக்கு மரியாத கொடுக் காட்டாலும், வயசுக்கு மரியாத கொடுக்காண்டாமா?”

“ஏன்? ஊர்ல மாப்பிள்ளை வீட்ல மரியாதக் குறைவா நடந்துகிட்டாங்களா?”