வழக்குச் சொல் அகராதி
மெச்சக் கொட்டல் - பாராட்டல்
153
ஒன்றைச் சொல்லும்போது அல்லது செய்யும்போது பாராட்டுவதற்கு அடையாளமாக ‘இச், இச்' என நாவால் ஒலி எழுப்புவதை மெச்சக் கொட்டல் என்பது வழக்கு. மெச்ச பாராட்ட; கொட்டல் - ஒலித்தல். பாராட்டுதலுக்குக் குறியாக ஒலி செய்தல் மெச்சக் கொட்டல் என்க.
மெச்சக் கொட்டுதல் என்பது தின்பதற்கு இல்லாமல் வெறும் வாயை மென்று கொண்டிருப்பதாம். 'மெச்சு மெச்செனக் கொட்டல்' என்க. மெச்சு - ஒலிக் குறிப்பு. மெச்சு மெச்செனத் தின்னல் என்பதில் இவ்வொலிக் குறிப்புண்மை அறிக. மெச்சட்ட மிடுதல் என்பதும் தின்னலே.
மேட்டிமை - பெருமை
மேடு, உயர்வு; மேட்டிமை என்பது மேடாம் தன்மையைக் குறியாமல் தன்னை மேலாக நினைக்கும் செருக்கைச் சுட்டுவ தாம். “அவன் மேட்டிமைக்காரன்; எவரையும் மதித்துப் பேசான்’ என்பதில் அவனுக்குள்ள செருக்குப் புலப்படுதல் வெளிப் படையாம். “உனக்கு மேட்டிமை இருந்தால் இருக்கட்டுமே! எங்களுக்கு ஆவதென்ன” என்று மேட்டிமைக்காரனை நெருங் காது விலகுவதும் மானத்தர் உணர்வாம்.
மேடேறுதல் - மேனிலையடைதல், கடன் தீர்தல்
பள்ளத்தில் இருந்து மேடேறுதல் பெரும்பாடு. மேட்டில் இருந்து பள்ளத்திற்கு வருதல் எளிமை. மேடேறப் பெருமுயற்சி வேண்டும். முயற்சியில்லாமல் இருந்தாலே போதும். பள்ளத் திற்கு உருண்டு வந்துவிடலாம். ஆதலால் மேடேறுதல் அருமை புலப்படும்.
மேட்டைக் குறியாமல் தொழில் பதவி படிப்பு ஆகிய வற்றில் மேனிலையடைதல், பட்ட கடன் குழியில் இருந்து தீர்த்து மேனிலையடைதல் என்பவை மேடேறலாகக் கொள்ளப் படும்போது வழக்குச் சொல்லாம். ஏதாவது நெருக்கடிச் செலவு நேருங்கால் இந்த ஆண்டு போகட்டும்; அடுத்த ஆண்டு மேடேறிக் கொண்டு பார்க்கலாம் என்பதில் மேடேறல், வளமை பெறல் பொருள் உள்ளதாம்.