உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இளங்குமரனார் தமிழ்வளம் 12

“மீனுண் கொக்கின் தூவி யன்ன

வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்

களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை

ஈன்ற ஞான்றினும் பெரிதே

என்றதும் (277), ஆகியவை மூதின் மகளிரின் இளஞ்சிறார் மாண்புகள் என அறிவதும், கிண்கிணி களைந்த காலில் கழல் தொட்டும், குடுமி களைந்த தலையிலே கண்ணி சூடியும், ஐம் படைத் தாலி களையாதும், பால் பருகுதல் நீத்து அன்றே சோறு உண்டும், தேரேறி நின்று போர்நோக்கிச் சென்ற தலை யாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆற்றலையும் அறிவையும் இடைக் குன்றூர்கிழார் வியந்து பாராட்டுவதும் (புறம். 77) அறிந்தோர் ‘வாளா' உரைத்ததாகக் கொள்ளார் என்க.

உடம்பு கொடுத்தல் என்றது உடம்பாலாம் பயன்களை யெல்லாம் கொடுத்தார் என்பது. இவர் உடல் உடைமை உயிர் ஆகிய அனைத்தும் நாட்டுக்கு நல்கிய நல்லோர் என்க.

"உடம்பொடு முற்றுழிக் கண்ணும்” என்றது உடலால் முதுமையும், அகவையால் முதுமையும் ஆகிய முதுமையும் ஆகிய இரண்டும் இயைந்த போதும் என்பது.

மூத்தாலும் மூவாதாரும், மூவாதும் மூத்தாரும் ஆகிய இருதிறத்தாரையும் உவமையால் விளக்கும் சிறுபஞ்ச மூலம்:

“பூத்தாலும் காயா மரமுமுள நன்றறியார்

மூத்தாலும் மூவார் நூல் தேற்றாதார் - பாத்திப்

புதைத்தாலும் நாறாத வித்துள பேதைக்

குரைத்தாலும் செல்லா துணர்வு.”

(23)

66

‘பூவாது காய்க்கு மரமுமுள நன்றறிவார்

மூவாது மூத்தவர் நூல்வல்லார்- தாவா

விதையாமை நாறுவ வித்துள மேதைக்

-

குரையாமை செல்லும் உணர்வு

(22)

உற்றுழி - உற்ற இடத்து. முன்னே (20) “ஒற்கத் துதவினான் ஆகுமால்” என்றதையும், அதன் விளக்கத்தையும் அறிக. உரிய பொழுதில் செய்யாத எவ்வினை தான் உயர்வுடைய தாகும்?