உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

135

தான் முந்தைநாட் கண்ட காட்சியும், இன்று அதன் விளைவாக நிகழவிருக்கும் மாட்சியும் தேர்ந்து உரைக்கும் வீறு தன்கண் உண்மையால் உரைத்தான். மாறுகொண்ட இருவர் நிலையை உரைக்குங்கால் இம் மரபுண்டு என்பதைப் புறப்பாடல்கள் தெளிவிக்கின்றன. முன்னிலையானை ‘நீயே' என விளித்து, அவனியல்புரைத்துப் பின்னே ‘யாமே' என்றோ 'அவனே’ என்றோ ‘அவரே' என்றோ கிளத்தலை ஆவூர் மூலங்கிழார், கோவூர்கிழார், காரிக்கண்ணனார், மதுரைக் குமரனார் ஆயோர் முறையே கிள்ளி வளவனையும் (40, 46) சோழன் குராப் பள்ளித்துஞ்சிய பெருந் திருமாவளவனையும் (58) ஏனாதி திருக்கிள்ளியையும் (167) பாடிய பாடல்களால் அறிக.

தோலா- தோலாத (தோற்காத) என்பதன் ‘தொகுத்தல்’ பிறர்க்குத் தோல்வி கண்டறியாத வலிமையைத் 'தோலாஉரன்' என்றார். சூளாமணி ஆசிரியர் தோலாமொழித் தேவர் என்பதும். அந் நூற்கண், 'தோலா நாவிற் சுச்சுதன்' (308) ஆர்க்குந் தோலாதாய்' (1473) 'தோலா மனமலர்ந்திலங்கு சய்கை (1790) என மூன்றிடங்களில் ஆளப்பட்டுள்ள அருந்தொடர்களும் நோக்கத்தக்கன.

வேற்கு, 'ஒன்னார் உட்கும் சுரை அமைநெடு' என்பவை அடைமொழிகள். ஒன்னார் என்பார் தன் இயல்போடு ஒன்றா தார்; அவராவார் பகைவர். ஒன்றியவர் உட்கும் வேலாயின் கொடுங்கோல் வழிப்பட்டதாம். உட்கும் - அச்சத்தால் நடுங்கச் செய்யும். 'உருஉட்காகும்' என்பது தொல்காப்பியம்; (785). நடுக்கும் வலியும் தளர்வும் நீக்குவான் அமர்ந்திருத்தலை ‘உட் கார்தல்' (உட்கு ஆர்தல்) என்று வழங்குதலுண்மை கருதுக. சுரையாவது உள்துளை. அது கோலுக்கும் கருவிக்கும் இடைப் பட இரும்பால் அமைக்கப் பெற்ற பொருத்துவாய். நெடுவேல் ஆகலின் குறிப்பால் அஃதுடையானின் நெடுமை அறிவுறுத்தார்.

சுடர்ப்பூண்- ஒளிமிக்க அணிகலம். இனி ‘வேல்' என்பதை வேல்பட்ட புண்ணுக்கு ஆகுபெயராக்கி விழுப்புண்ணை அணி கலமாகக் கொண்டோன் என்று பொருள் கூறினும் ஆம். 'புண்ணோ புகழின் கண்ணே' என்றும் (மனோன்.) “விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள், வைக்கும் தன் நாளை எடுத்து' என்றும் (திருக். 776) வருவனவற்றால் வீரர் விழுப் புண்ணை விரும்புதல் அறிக.

எல்லாத் தகுதிகளிலும் தமக்குத் தலைவனாம் தகுதியே சிறந்து நிற்றலின் ‘எம்இறை' என ஆர்வத்தால் முந்துரைத்தான்.