உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. கொக்கு

பறவைகள் சில ஒன்று கூடுகின்றன. மகிழ்ச்சியாகக் கூச்சலிடுகின்றன; எதற்காகவோ சண்டையும் போடுகின்றன; அந்நிலைகளில் அவற்றின் ஒலியைக் குழந்தை நிலையில் இருந்த மாந்தன் காதால் கேட்கின்றான். அவ்வொலி, 'கொக்' கொக்’ என்பதாக அவனுக்குப் படுகின்றது. அவ்வொலியால் அப் பறவைக்குக் ‘கொக்கு' எனப் பெயர் வைக்கின்றான். பின்னர் அப்பெயரை அவனும் தொடர்ந்து வழங்கினான். அதனைக் கேட்ட பிறரும் தொடர்ந்து வழங்கினர். ஒலி வழியால் வந்த அச்சொற் செல்வம் இந்நாள் வரை தொடர்கின்றது.

'கொக்' ‘கொக்' என ஒலிக்கும் ஒலியால் வந்த அப்பெயர், கொக்கைக் காணாத டத்தில் சொன்னாலும் அதன் வடிவத்தை நினைவூட்டுவதாக நிலைபெற்றது அதனால் அச்சொல் வளர்ந்தது. மொழிவளத்திற்கும் உதவியது.

கொல்லு வேலை செய்பவர், ஒரு கம்பியை எடுத்து வளைவாகச் செய்தனர். அவர்க்குக் கொக்கின் வடிவம் நினைவில் நின்றது. கொக்குப்போல் வளைத்துள்ள அக்கம்பியைக் 'கொக்கி' என்றார். கொக்கியில், கொக்கு வடிவம் அமைந்த அளவில் நில்லாமல், அதன் பெயரும் இணைந்த சிறப்பு இந்நாள் வரை மாறாமல் உள்ளதை நாம் அறிகிறோம்.

பொன்னால் ஒரு தொடர் (சங்கிலி) செய்தார் ஒருவர். ஒரு முனையை மறுமுனையில் பூட்டிக் கழற்றப் ‘பூட்டுவாய்’ அமைத்தார். அப்பூட்டுவாய் அமைப்புக்குக் கொக்கின் கழுத்தும் வாயமைப்பும் துணையாயின. அமைப்புக்குத் துணையாய, அது, பெயர்க்கும் துணையாயது. அதனால் ‘கொக்குவாய்' என்னும் பெயர் அமைந்தது. தொடர்ந்து நிலைபெற்றது. கொக்குவாய் ‘கொக்கில்’, ‘கொக்கி' எனவும் வழக்கில் நின்றது.

ஒரு புழு நெளிந்து வளைந்து சென்றது. அதன் வளைவை அறிந்த ஒருவன் அப்புழுவின் வளைவுடன் கொக்கின் வளைவை ஒப்பிட்டுப் பார்த்தான். அதன் விளைவாகக் ‘கொக்கிப் புழு எனப்பெயரிட்டான். தமிழுலகம் அப்பெயரைப் போற்றி ஏற்றுக் கொண்டது.