உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

121

சாற்றின் இடத்தை ‘இரசம்’ பற்றிக் கொண்டது என்பதால் பயன் என்ன? 'பழச்சாறு' 'கனிச்சாறு' எனப் பளிச்சிடும் எழுத்தில் புத்தம் புதுவணிக நிலையங்களில் காண்பது இல்லையா! அந்த உணர்வு வந்துவிட்டால் பொது வழக்காகி விடும். சிலர் துணிந்து நடைமுறைக்குக் கொண்டு வந்தால், பலரும் ஏற்கும் நிலை கட்டாயம் ஏற்பட்டே தீரும்!@

நாம் ‘சட்னி' என்பதை யாழ்ப்பாணத்தார் ‘பச்சணி என்கின்றனர். ஏன்? பச்சைமிளகாய், பச்சைத் தேங்காய் (அவிக்காத, காயவைக்காத, பொரிக்காத தேங்காய்) இத்தகைய பொருள்களை அரைத்து ஆக்கும் துவையலைப் பச்சணி என்பது தக்கதே. நாம் ‘பச்சடி’ என ஒரு வகைக் கறியமைத்துக் கொள்வது இல்லையா? ‘பச்சணி’, அரைத்து ஆக்குவது; பச்சடி, சமைத்து ஆக்குவது; முன்னது, சிற்றுணவுத் துணை; பின்னது, பேருணவுத் துணை.

இனிக் கிச்சடி என்பதொரு சொல் உண்டு. அது கோயில் திருவுணவுள் ஒன்றெனக் கோயிலொழுகு கூறும்; கிச்சடி சென்னைப் பகுதியில் ஒருவகைச் சிற்றுணவு; நெல்லைப் பகுதியில் சட்டினிக்கு ஒரு பெயர் கிச்சடி என்பது. இக்கிச்சடியும் தமிழ்ச் சொல் அன்று. மராட்டிச் சொல் என்பர்.

நாம் சட்டினியை யாழ்ப்பாணத்தார் வழங்குவதுபோல் 'பச்சணி' எனலாம். அல்லது பழைய வழக்காகிய கரை துவை யலை ஆட்சிக்குக் கொண்டுவரலாம். மொழிக்காவல் என்பது சொற்காவல்! புதுச்சொல்லாக்கம்; பழஞ்சொல்லாட்சியைப் புதுக்கல் என்பவை சொற்காவல் வழிகளில் தலையாயவை.

'உறங்கியவன் கன்று கடாக் கன்று' என்பது பழமொழி. பருப்புக் குழம்பின் இடத்தைச் ‘சாம்பார்’ பறித்துக் கொண்டது! அதனை எளிமையாகத் தனித் தமிழ்ப் பற்றுடையவர்களாலும் மீட்டுக் கொள்ள முடிகிறதா?

சட்டினி இடத்திலே பச்சணி வருமா? கரைதுவையல் வருமா? இரண்டுமே வருமா? வழக்குக்குக் கொண்டுவரும் உணர்வாளர்களைப் பொறுத்தது அது. உணவு விடுதிக்காரர் எவர்க்கேனும் மொழிக்காவல் உணர்வு உண்டாகாதோ? உண்டாகிவிட்டால், ஓராயிரம் தமிழ்க் காவலர்களின் ஒரு மொத்த வடிவாக அவர் தொண்டாற்ற முடியும்!