உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. வள்ளல் காரி

காரி என்னும் வள்ளலின் புகழ் நாடறிந்தது. அவன் புகழ் பரப்பும் பாடல்கள், சங்கச் சான்றோரால் பாடப் பெற்ற பாட்டு தொகைகளில் உண்டு. அவன் புகழ் விளக்கும் ஊர்களும் பல உள்ளன.

காரி என்னும் பெயர் இவ் வள்ளல் காலத்தும், இவனுக்குப் பின்னரும் பயில வழங்குகின்றது. காரிக் கிழார், காரிக் கண்ணனார் சங்கச் சான்றோர். காரியாசான் சிறுபஞ்ச மூலத்தின் ஆசிரியர். காரி மாரனார் நம்மாழ்வார்; காரி நாயனார் அறுபான் மூவருள் ஒருவர்; காரி ஆறும், காரி நாடும் பண்டு விளங்கின.

கர், கார், கால், காள், காழ் இவற்றின் வழியாகப் பிறந்த சொற்கள் நூற்றுக்கணக்கில் உள. தமிழ்ச் சொற் பரப்பைக் காட்டும் மூலங்களுள் ‘கர்’ என்பதும் குறிப்பிடத் தக்கது. இவையெல்லாம் ‘கருமை’ என்னும் பொருள் வழியே வருதல் விளங்கும்.

'காரி' என்னும் பெயரின் மூலம் 'கார்' என்பதே. கார் என்பது கருமையாய், கருமுகிலாய், மழையாய், மழைக் காலமாய், மழைக்கால விளை பயிராய், விளை பயிரின் பயனாய்ப் படிப்படியே பொருளால் விரிந்து தமிழ் வளத்தைக் காட்டு கின்றமை அறிந்து மகிழத் தக்கது!

காரி கரு நிறத்தால் பெயர் பெற்றானா? அவன் கரியன் ஆயினும் ஆகலாம்; செய்யன் ஆயினும் ஆகலாம்! அவை, அவன் புகழுக்குரியவை அல்ல. வண்ணத்தைக் கொண்டு பெயரமைதல் வழக்கே. ஆனால் அவ் வண்ணப்பெயர் மறுதலையாகப் பொருள் தருவதும் வழக்கே! “வெள்ளையப்பன்’ ‘கறுப்பையா'வாக இருப்பது இல்லையா? 'கறுப்பாயி' சிவப் பாயி'யாக இருப்பது இல்லையா?

காரியின் நிறத்தைப்பற்றிய குறிப்பு அறியக்கூடவில்லை. அவன் வண்மையும் வன்மையும் செம்மையும் சீர்மையும் அவனைப் பற்றிய பாடல்களால் அறியவருகின்றன.