உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

பின் கவலை எங்கே வரப்போகின்றது? உள்ளுக்குள் மட்டுமா உவகை கொள்கின்றாள்? வெளியேயும் அல்லவா சிரித்துக் கெக்கலி கொள்ளுகின்றாள்! என் ஆட்சியிலே எனக்கு முன்னாகவே நகைக்கின்றாள்! மாசு மறுவற்று விண்ணகத்தே விளங்கும் வெண்ணிலவு போல் சிரிக்கின்றாள். இவள் பெருகச் சிரிக்கும் சிரிப்பை இதழ்களால் கூடத் திரையிட்டு மறைக்க இயலவில்லையே. முகில் மறைத்து மூடாத மதியம் போல் இதழ் மூ மூடாச் சிரிப்பு. இச் சிரிப்பால் எழும் ஒளி என் கருமேனியிலே பட்டு எதிரொளி செய்ய நானும் கண்கொண்டு காண! நீயும் ஒரு பெண்தானே! என்னைப் போலச் சமயம் அறிந்து செயலை முடித்துக் கொள்ளும் ஆற்றல் உனக்கு உண்டா? என்று நகைக்கின்றாளா? என்னைப் பார்த்து! அடி! கொடுமையே! கொண்ட கணவன் குற்றுயிராகக் கிடக்கின்றான். கொள்ளை மகிழ்ச்சியிலே தவழ்கின்றாள் இவள். இதுதான் "தற்கொண்டானைப் பேணும்தகை சான்ற" செயல்போலும்! வெட்கம்! வெட்கம்! பெண் இனத்திற்கே பெரு வெட்கம்!

66

எனக்கோ நாணம் மிகுகின்றது. இன்னும் கணவன் முன்னாக அக் கைகேயிக் கொடியாள் நிற்கத்தான் இருக்கத்தான் செய்கிறாள். நானோ அவள் செய்யும் கொடுமையை எண்ணி ஏங்கிப் புலம்புகின்றேன். நானும் இந்நாட்டிலே ஒரு பெண்ணாகப் பிறந்து பெரும்பழி தேடிக் கொண்டேனே என்று வருந்துகின்றேன். எந்த ஓர் ஆடவன் கண்ணினும் படாமல் தப்பி ஓடி ஒளியவும் அணியம் ஆகிக் கொண்டேன்! இராமன் முன் மட்டுமன்று; அவன் உயிர்த் தம்பி இலக்குவன் முன் மட்டுமன்று, வாய்மைக் கொருவனாம் தயரதன் முன் மட்டுமன்று, எந்த ஓர் ஆண் முன்னும் விழிக்க மாட்டேன்” என்று ஓடுகின்றாள்! ஓடி ஒளிகின்றாள்.

ஏன்!

“கைகேயியிடம் சென்று கடிந்து உரைத்துத் திருத்தவும் முடியாது; முடியாதே என்று ஒப்புக்காகவாவது உணர்ச்சியை அமுக்கிக் கைகொட்டிச் சிரிக்கவும் முடியாது; போனால் போகட்டுமே என்று இரக்கம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாது” என்று எண்ணியே ஓடுகின்றாள். மைந்தர் எவரும் வைகறையில் விழித்தெழத் தொடங்குமுன் வரிந்து கட்டிக் கொண்டு ஓடுகின்றாள். அவள் யாவள்? அவளா? இரவு என்னும் பெண். “கங்குல் நங்கை” என்பது, பாவலன் வைத்த பண்புப் பெயர்.