உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - பொருள்

LO

5

1. திருக்குறள் ஆராய்ச்சி

1. வள்ளுவம் - வாழ்வு நூல்

வள்ளுவம் வாழ்வு நூல்; வாழ்வார்க்கென வாழ்ந்த பெருமகனாரால் வழங்கப்பட்ட நூல்; வாழ்வார்க்கு வானம் வழங்குவது போல வாழவிழைவார்க்கு வாழ்ந்தாரால் வழங்கப் பட்ட நூல்! வாழ்வின் ஒரு பகுதியைச் சுட்டும் நூலன்றுவள்ளுவம். எந்நிலையர் நல்வாழ்வுக்கும் ஏற்றவற்றையெல்லாம் ஒருங்கே எடுத்துரைக்கும் நூல். பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்னும் பிறவிப் பொது நிலையில் கூர்ந்து நின்று, சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால் என அளவீடு செய்துரைக்கும் அருமை நூல் வள்ளுவம்! வாழ்வாங்கு வையத்துள் வாழ்ந்தார், வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுமென மண்ணுலகிலேயே விண்ணுலகைப் படைத்துக் காட்டும் நூல் வள்ளுவம்!

வாழ்வாங்கு வாழ்தல் எனின் யாது' என வினவுவார்க்கு வாழ்வாங்கு வாழ்தல் விளக்கமே வள்ளுவம் என்பதைக் கையி டைக் கனியாகக் காட்டும் நூல்! கற்பனையில் கனிந்தது கதை நூல்! கற்பனையொடு உணர்வும் கட்டமைப்பும் கெழுமியது பாவியம் என்னும் நூல்!

இவை தூறலாய்த் தூவானமாய் நலம் பயப்பன; நலம் பயவாதனவும் - ஏன் - தீமை பயப்பனவும் கூட இவற்றில் உண்டு! வாழ்ந்தோர் வரலாற்று நூல் எனின் நல்வழி காட்டி நூலே. வாழ்ந்த ஒருவர் வரலாறு வாழ்வார்க்கு வழிகாட்டியாவதுடன் வழிகூட்டியாவதும் உண்மையால் முன்னை நூல்களிலும் நலம் பயப்பதே. ஆயின், வரலாற்று நூல் தனி ஒருவர் ஒரு துறையர் - ஒரு நிலையர் -வரலாற்று நூலே, பிறதுறையர் பிற நிலையர்க்கு அத்துணைப் பயன் தரா! அன்றியும் வரலாற்றில் புனைவும், பொய்ம்மையும், சார்பும், மறைப்பும், எழுதுவார் எண்ணமும், வண்ணமும் வழுவியமைவது உண்மையால், வரலாற்று நூல்களுள்ளும் பெருநலம் பயப்பன ஒரு சிலவே.

-