உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

ஆனால், அறநூல் செய்யும் ஆக்கம் பெரிதாம். அறவோர் செய்த அற நூல் ஆக்கம், காலம், இடம், இனம் முதலான கட்டுகளைக் கடந்து நின்று கடலும், புவியும், வானும் போல விரிந்த நலப்பாடுகளைச் செய்வதாம்.

அடுத்து நின்று அருள் காட்டுவதா? அரவணைத்து நின்று அறம் கூறுவதா? எதிரில் நின்று இடித்துரைப்பதா? இனிது மொழிந்து கனிவால் தழுவுவதா? சார்பு இன்றிச் சால்புரைத்து தூக்கி நிறுத்துவதா? அல்லதையும் நல்லதையும் ஆராய்வுத் திறனுடனும் வகுத்துரைத்துச் செல்லும் நெறியைச் செவ்விதிற் காட்டுவதா? பெற்ற தாயாய், பிறங்கும் தந்தையாய், முற்றுணர் ஆசானாய், முழுநலக் காதலியாய், முறைசூழும் நண்பனாய், கட்டளையிடும் காவற் கடவோராய் - தகத்தக நின்று தக்க வகைகளில் உதவும் நூல் அறவோர் அருளிய அறநூலே! அவ்வறநூல் வகையுள் நனி சிறந்து உயர்வற உயர்ந்தது நம் மறையாம் வள்ளுவமே!

வள்ளுவம் பிறபிற அறநூல் உரைக்கும் கருத்துகளை வழங்குவதுதானே! தனிச் சிறப்பென்ன, என்று அறிந்தோர் வினவார். எவரும் நூலெனக் கொண்டொழுகும் வண்ணம் சார்பிலாச் சால்பில் நிற்பதை ஈராயிரம் ஆண்டுகளாக இவ்வுலகம் தெளிந்தறிந்து கொண்டுள்ள ஒன்றே வள்ளுவச் சீர்மையை விளக்கச் சாலுமே!

வள்ளுவ அறச் சிறப்பு, பலப்பல! அவை மூன்று : ஒன்று, வரம்பிட்டு உரைத்தல், மற்றொன்று வீழ்ச்சியிலும் வாழ்ச்சிப் பயன் காட்டல், இன்னொன்று நம்பிக்கையுரைத்தல்.வள்ளுவத்திற்கு ‘அறம்' என்பதொரு பெயர். முப்பால் ஊடகமும் அறமேயாகலின் முழு நூலும் அறமெனப்படுதல் முறைமையேயாம். அறநூலாம் திருக்குறள் அறத்தின் இலக்கணமாக என்ன கூறுகின்றது? முப்பால் ஊடகத்தை முச்சீர்களிலேயே முடித்து வைக்கின்றது. "மனத்துக்கண் மாசிலன் ஆதல்' என்பதே அது.

முப்பத்திருவகை அறமென எண்ணினாலும் பட்டியலிட்டுக் காட்டினாலும் அறத்தின் ஓர் அடிப்பகுதியையும் தொட்டுக் காட்ட முடியாமல் தொலைவில் நிற்க, முச்சீர் வள்ளுவ அறமோ முழுதுறக் காட்டுகிறது. அறத்தின் வரம்பைக் காட்டுவதுடன் அடி மூலத்தை அகழ்ந்து வைத்து விரிவற விரிந்த விளக்கத்தை வெட்டவெளி மலை மேல் விளக்காகக் காட்டுகிறது.

மனத்துக்கண் மாசு இலனாதல் எய்தினால் அவன் அறவோன்; அவன் சொல் அறம்! அவன் செயல் அறம்! அச்