உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

இளங்குமரனார் தமிழ் வளம்

16

வரையறுக்கப்பட்டு விடுமாயின் அனைத்துப் பாக்களின் முடி நிலைகளும் அறிந்தவாறாம்.

பாட்டிலும் தொகையிலுமாகச் சங்கச் சான்றோர்களால் பாடப்பட்டு நம் கைக்குக் கிட்டியுள்ள பாடல்கள் 2381. இவற்றுள் கலிப்பாவால் அமைந்த கலித்தொகைப் பாடல்கள் நூற்றைம்பதும், பரிபா என்னும் ஒருவகைப் பாவால் அமைந்த பரிபாடலும் நீங்கிய பாடல்கள் எல்லாமும் அகவலே. இவற்றுள் ஐங்குறு நூற்றின்கண் ‘அன்னாய்' என முடிவுறும் இரண்டு பத்துகள் (கள்வன் பத்து, அன்னாய் பத்து) தவிர்த்து மற்றைப் பாடல்கள் ஏகாரத்தால் மட்டுமே முடிந்துள. இதனை நோக்குதல் இன்றியமையாதது. மேலும் இப்பாடல்களின் ஈற்றுச்சீர் அனைத்தும் மாச்சீராக மட்டுமே உள. தேமா, புளிமா என்னும் வாய்பாடு அமையும் சீரன்றி விளச்சீர் காய்ச்சீர் முதலிய சீர்கள் வரும் பாடல்கள் எவையும் இல. இவ்வாற்றான் ஏகார இறுதியாகிய மாச்சீர் மட்டுமே அகவலுக்குச் சிறப்புடைய ஈறெனப் பண்டையோர் கொண்டனர் என்பது தெளிவாகும்.

கல்லாடம் அகவற் பாவாலேயே அமைந்த நூல்; அதன் கண் நூறு அகவற் பாக்கள் உள. அப்பாக்களிலாதல் நால்வர் மணிமாலை, குமரகுருபர அடிகளால் இயற்றப் பெற்ற கலம் பகம், கோவை, மாலை ஆகியனவற்றுள் அமைந்துள்ள அகவற் பாக்களிலாதல் இப்பண்டை நெறி மாறுபடக் கண்டிலோம்.

வெண்பா முன்னாகவும் அகவல் பின்னாகவும் இணைந்து நடப்பது மருட்பா. அதன் ஈற்றுப் பகுதி அகவலே ஆதலின் அதன் முடிநிலையும் ஏகார இறுதியாகிய மாச்சீராகவே

அமைந்துள்ளது.

கலிப்பாவின் மடிநிலை உறுப்பு, சுரிதகம். அச்சுரிதகம் அகவற் சுரிதகம் வெண் சுரிதகம் என இரண்டாம். இவற்றுள் அகவற் சுரிதகம் கொண்ட பாக்கள் அனைத்தும் முன்னை விதிக்கு முரண்பட்டில. காட்டாக 150 கலியுள் அகவற் சுரி தகத்தால் முடியும் 88 பாடல்களுள் 86 பாடல்கள் ஏகார இறுதி பெற்ற மாச்சீராகவே உள. இரண்டு மட்டும் இகர இறுதி பெற்ற மாச்சீராக உள. (கடவுள் வாழ்த்து ‘பாடி’; பாடல் 55 'தோழி’)

வஞ்சிப்பா அகவற் சுரிதகம் மட்டுமே கொண்டு வருவது. அச்சுரிதகமும் மேற்கண்ட முடிவுக்கு மாறுபட்டிலது.