உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

பதிப்பாசிரியர் முன்னுரை

'தமிழன்னை எத்துணை எத்துணையோ நறுமண மலர்களைப் பெற்றிருக்கிறாள்; அம்மலர்களைத் தனித்தனியே கண்டு கண்டு நுகர்ந்து நுகர்ந்து களிப்புற்றிருக்கிறாள்; தனித்தனி மலர்களை மாலையாக்கித் தொடுத்து அதன் மாண்பிலே மயங்கியிருக்கிறாள்; மாலைகளையும் பிணையலாக்கிச்சூடிச்சூடிப் பேருவகை யுற்றிருக் கிறாள்; அவ்வெழிற் காட்சியிற் றோய்ந்து மெய்ம்மயங்கித் தன் மக்கள் தம்மை மறந்து வாயார வாழ்த்திக் கொண்டிருந்த பொழுதி லேயே எத்துணையோ நறுமண மலர்களையும் மாலைகளையும் மறைந்துபோக விட்டுவிட்டாள்! சிதைந்துபோக விட்டுவிட்டாள்! உதிர்ந்துபோக விட்டுவிட்டாள்! அவளா மறையவும் சிதையவும் உதிரவும் விட்டுவிட்டாள்! மயங்கிய மடவராம் மக்கள் விட்டு விட்டனர். மயக்கத்தின் இடையே விழித்த ஓரிருவர் அன்னையின் அணிகலங்களையும் அழகு மாலைகளையும் நோக்கினர். ‘அந்தோ! அவட்குப் பூட்டப்பெற்ற அணிகள் எத்துணை எத்துணை! மணிகள் எத்துணை எத்துணை! சூட்டப்பெற்ற மலர்கள் எத்துணை எத்துணை! மாலைகள் எத்துணை எத்துணை! திருவோலக்கம் தீருமுன்னரே திருடு போகி விட்டனவே! உலாக்காட்சி ஓயுமுன்னரே ஓடி ஒளிந்து விட்ட _னவே!' என்று ஆடி ஓடித் தேட முனைந்தனர். ஒருவன் செய்த செயற்கருஞ் செயலால் சில மலர்களில் சில இதழ்கள் கிட்டின; சில மாலைகளில் சில மலர்கள் கிட்டின; ஏக்கம் பெரிதாயிற்று! என் செய்வது! மேலும் தேடினர், பயனில்லை. இழந்த மலர்களிலும் மாலைகளிலும் சில இதழ்களையும், மலர்களையுமாவது கண்டு களிக்கத் தேடித் தந்தானே ஒருவன் - அவன் வள்ளல்! அவன் அருளாளன்! அவன் அறிஞன்! தன்னிலை மறந்த தமிழர் இடையே தகவாளனாகத் தவழ்ந்த அவன் வாழ்க! என்று வாழ்த்தினர்! அவர்களோடு சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்!” - இவ்வெண்ணமே