உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இளங்குமரனார் தமிழ் வளம் 17

‘புறத்திரட்டு' என்னும் இந்நூலைக் காண்பார் உள்ளத்தெல்லாம் ஊற்றெடுத்துப் பெருகுதல் உண்மையாம்.

புறப்பொருள் பற்றிய அரிய பாடல் மணிகளைத் திரட்டி வைத்த ஒரு பொற்பேழை புறத்திரட்டு. ஆம், இப்புறத்திரட்டு பொற்பேழை மட்டுமன்று! ஒரு பெரும் புதையல்; அருமணிப் புதையல்! இதனைத் தொகுத்து வைத்த தொண்டன் தமிழ் அன்னைக்கு வாய்த்த ஒப்பதோர் அன்பில்லாக் கண்ணப்பன்! சுவைத்துச் சுவைத்து இறைவன் உண்ணுதற்கு அதுக்கி அதுக்கிப் பார்த்து அரியவை தேர்ந்து படைத்த கண்ணப்பனுக்கு ஒப்பாகச் செந்தமிழ்ப் பாக்களின் சுவையிலும் அழகிலும் ஈடுபட்டு ஈடுபட்டுத் தான்பெற்ற இன்பம், தமிழ் கூறும் நல்லுலகும் எய்துமாறு படைத்து வைத்த பண்பாளி! திக்குத் தெரியாத காட்டில் திரட்டி வைக்கப் பெற்ற மணிகளை எவ்வாறு இனம் காண்பேம், எவ்வாறு இடம் காண்பேம் என்று தத்தளிக்கும்போது, சீருறக் காட்சிச் சாலையில் அடுக்கிக் காட்டி “இப்பொருள் இங்குக் கிடைத்தது” என்று குறிப்பும் எழுதி வைத்த ஏந்தல்! ‘அவன் பெயர் என்ன? அவன் வரலாறு தான் என்ன?' என்னும் ஆர்வத்தால் உந்தப்பட்டுப் புரட்டிப் பார்ப்பவர்க்கு ஏக்கம் உண்டாக பிறர் பிறர் பெயரையெல்லாம் சுட்டிக் காட்டித் தன் பெயரை மட்டும் தன்பேரர்க்குக் காட்டாத புகழும் வேண்டாப் புகழாளி! அவன் தகவுக்கு அஃதேற்கலாம்; நமக்கு எத்துணைப் பேரிழப்பு!

சங்க நூல்கள் முதல் பதினைந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நூல்கள் வரை அமைந்த புறப்பொருட் செய்யுட்களைத் தொகுத்துக் காட்டிய ஓர் அரிய தொகை நூல் புறத்திரட்டு; சங்கத் தொகை நூல்கள், பல தனிப்பாடல்களைத் தொகுத்துத் தொகையாக்கப் பெற்றது. புறத்திரட்டு, பல நூல்களில் அமைந்த பாடல்களைப் பிரித்துத் தொகையாக்கப் பெற்றது. முன்னது மலர்களை மாலையாக்கிய பணி. பின்னது மாலையில் திகழ்ந்த அருமலர் களைத் தனியே எடுத்துத் தொடுத்து மாலையாக்கிய பணி!