உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இளங்குமரனார் தமிழ்வளம்

18

கேட்ட நெஞ்சம் உருகக் கூறினாள். இக் காட்சியைப் படம் பிடித்துக்காட்டுகிறார் கபிலர் பெருமான். ‘நல்லை மன்னென் நகூஉவுப் பெயர்ந்தோனே' என்பது அவர் வாக்கு.

இன்னொரு தாய், நுண்ணிய உணர்வுடையவள்: காதல் ஒழுக்கம் தூயது என மதிப்பவள்: தன் மகள் தவறு செய்தறியாத தவமகள் என்பதை உணர்ந்தவள். தம்மகள் காதலைத் தான் அறிந்து கொண்டதைக் குறிப்பால் உரைக்கிறாள். “இது வரை ல்லாத நறுமணம் நின் கூந்தலில் உள்ளது” என்கிறாள். தலைவன் தனக்குப் புதுப் பூச் சூட்டியதைத் தாய் அறிந்து கொண்டாள் என்பதை அறிந்த மகள், கற்பு வழியில் தலைப் படுகிறாள். இதனைக் கண்ணகாரன் கொற்றனார் நற்றிணையில் நவில்கிறார். “நறிய நாறும்நின் கதுப்பென்றேனே” என்பது அவர் வாக்கு.

ஊரார் பழிச்சொல் கேட்ட ஓரன்னை, “மகிழ்வாள் ஆயினும் மகிழட்டும்: மாறுபடுவாள். ஆயினும் மாறுபடட்டும்: அது பெற்றவள் பாடு: பிறந்தவள் பாடு” என்று எண்ணாமல் பழிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளனரே: அவர்கள் ஊரறியச் சொல்லியதன்றி யானறியவும் கூறுகின்றனரே” என்று வருந்துகின்றாள். மற்றோர் அன்னை, “சிலரும் பலருமாகக் கூடிக் கண்ணும் கண்ணும் பேசி, மூக்கின் உச்சியில் சுட்டு விரலைச் சேர்த்துப் பழிக்கின்றனரே” என்று பதைக்கின்றாள்.

ஊர் வாயோ, உரிமை மகளை ஊரைவிட்டு ஓட வைத்து விடுகிறது. கூட்டை விட்டுப் பறக்கும் பறவை போல் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறாள் மகள்: தாய் என்ன பாடுபடுவாள்? “தீம்பாலில் தேனைக் கலந்து பொற்கிண்ணத்தில் வைத்து யான் ஊட்டுவேன்:அப்பாலையும் பருகாமல் இப்பாலும் அப்பாலும் ஓடிய என்மகள் அப்பாலை நிலத்தை எப்படிக் கடந்தாளோ?” என்று வியப்போடு வெதும்புகிறாள்.

மற்றோர் அன்னை, தான் மகளுக்குக் குறிப்பாக உரைத்ததையும் புன்முறுவல் செய்ததையும் கூடத் தன் குற்றமாக எண்ணி வருந்துகிறாள். "நான் அறியாமல் தவறு செய்து விட்டேன்; அவள் தந்தைக்கும் உடன்பிறந்தார்க்கும் நயமாய்ச் சொல்லி நான் மணமுடித்து வைத்தேன் இல்லையே” என்று புலம்புகின்றாள்.