உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

வாழ்வியல் வளம் வேண்டார் எவர்?

வாழ விரும்பும் பிறப்பே உயிர்ப் பிறப்பு.

வாழ்கிறதா? வளவாழ்வு வாழ்வதாக உணர்கின்றதா? வள வாழ்வுக்கு வழி என்ன என்று கண்டு அதனை அடைய முயல் கின்றதா? என்று வினாவின் அவ்வினாக்களுக்கு விடைதரப் பலரால் இயல்வதில்லை! ஏன்?

'வெந்ததைத் தின்று விதிவந்தால் போவது' எனப் பலர் தம் வாழ்வைச் சுருக்கி விட்டனர். அதனை எண்ணிப் பார்க்கவும் துணிவிலார் ஆகிவிட்டனர்.

‘வாழ்வாவது மாயம்; மண்ணாவது திண்ணம்' என்று போலித் துறவு புகலத் தொடங்கி விட்டது.

ஒருவர் வாழ்வு மற்றொருவர் வாழ்வுக்கு எவ்வகையில் எல்லாம் துணையாய் -தூண்டலாய் - துலக்கமாய் - இருக்கும் எனின் வாழ்ந்தோர் வாழ்வியலைக் காண வேண்டும். வையக வாழ்வியலைக் கருத வேண்டும்.

-

பண்புடைய சான்றோர்களாலும், அறிவறிந்த பெரு மக்களாலும் இவ்வுலகம் பெற்றிருக்கின்ற பெற்று வருகின்ற பேறுகளை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர் வாழ்வு என்ன அவர்க்கே இயல்வதா? எம்மால் இயலாதா? அவரைப்போல் பிறர்க்கென வாழும் பெருந்தகையராகயாம்; வாழ எமக்குத் தடை என்ன? தடை எது எனினும் அதனை உடைத்து உயர்ந்தோங்கி நின்று உலகு பாராட்ட வாழ்ந்தவர் இலரா? அவரை அடி ஒற்றி தடம் பற்றி யாமும் நடக்கலாமே! நடையிட வேண்டுமே! என்னும் உணர்வு வீறி எழுந்தால், வெற்றி நம் கைக்குள் வந்து விடும் அல்லவா!

-