உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. இரவே வாழ்க

அகப்பொருள் இலக்கண நூல்கள், பொருளை மூன்று வகையாகப் பகுத்து விரித்துக் கூறுகின்றன. அவை முதற் பொருள், கருப்பொருள் உரிப்பொருள் என்பவை. அவற்றுள் முதலாவதாக உள்ள முதற்பொருள் என்பது இடமும் காலமும் ஆகும். இடமும் காலமுமே மற்றைப் பொருள்களெல்லாம் கருக் கொள்ளவும், உரிமை உணர்வு பூண்டொழுகவும், நிலைக்களம் ஆகலின் முதற்பொருள் எனப் பெற்றன.

காலமாகிய முதற்பொருளும் பெரும்பொழுது சிறு பொழுது என இரண்டாகும். கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், வேனில் என்னும் ஆறும் பெரும் பொழுதுகள். இவை ஆவணித் திங்கள் முதல் இரண்டு இரண்டு திங்களாக எண்ணப் பெறும்.

சிறுபொழுது மாலை, யாமம், வைகறை, எற்பாடு, நண்பகல் என ஐவகைப்படும். இவற்றுள் யாமம் என்று கூறப்பெற்ற சிறுபொழுதே நள்ளிரவாகும்.

'நள்' என்பது ‘நடு’ என்னும் பொருள் தருவது. நண்பகல் என்பது பகலின் நடுப்பொழுதினைக் குறிப்பது போல, இரவின் நடுப்பொழுதினைக் குறிப்பது நள்ளிரவு ஆகும். இந்நள்ளிரவுப் பொழுதினைப் புலவர் பெருமக்கள் தம் புலமைத் திறம் விளங்க எவ்வாறு படைத்துள்ளனர் என்பதைக் காண்போம்:

பூக்கள் மலர்வதைக் கொண்டு, நம் முன்னோர் பொழுதறிந்த துண்டு. ஆதலால், “பொழுதில் முகமலர் உடையது பூவே” என்றார் பவணந்திமுனிவர். கவிமணி தேசிக விநாயகர் இதனை மிக நயமாகக் கூறுகின்றார்.

ஓர் ஏழைச் சிறுமி: தனக்குக் கடிகாரம் வேண்டும் என்று தன் தாயிடம் கேட்கின்றாள்.