உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

மழையற்று வறண்ட நிலத்தும் வளர்வது. அதனால், அப் பெயரால் பாலை நிலம் வழங்கப் பட்டது. மலையும் காடும் வளமற்று வறண்ட நிலையில் அதனைப் பாலையாகக் கொள்வது தமிழக வழக்காயிற்று. இதனையே,

"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து

நல்லியப்பு அழிந்து நடுங்குதுயர் உறுத்துப்

பாலை என்பதோர் படிவம் கொள்ளும்

என்றார் இளங்கோவடிகள். ஆனால், குமரிக்கண்டத்திருந்த ஏழ்முன் பாலை, ஏழ்பின்பாலை என்னும் நாடுகள் நம் கருத்தில் தோன்றி, ஐந்திணை நிலமும் இயல்பாக இருந்ததை விளக்கும்.

நானிலத்து ஒழுக்கங்களும் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனப்பட்ட வை போலவே, பாலை நில ஒழுக்கமும் பாலை எனப்பட்டது. முறையே இவ்வைந்திணை ஒழுக்கங்களும் புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் எனப்பட்டன.

பல்வேறு வகையாகக் கூறப்படுவது பொருள். அதனை அகத்திணை அமைவு கருதி, முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என மூவகைப் படுத்திக் கூறினர் (950).

முதற்பொருள் என்பது, நிலமும் பொழுதும். கருப்பொருள் என்பது, முதற்பொருள் வழியாகக் கருக்கொண்ட பொருள்.

உரிப்பொருள் என்பது, உயரிய மாந்தப் பிறப்பின் உரிமையாய் அமைந்த ஒழுக்கப் பொருள்.

இம் முப் பொருள்களுள் மூன்றாவதாகிய ஒழுக்கப் பொருளே - உரிப்பொருளே -ஆசிரியர் கூறுதற்கு எடுத்துக்கொண்ட பொருளாகும். முதற் பொருளாகிய நிலமும் பொழுதும், உரிப்பொருள் நிகழ்தற்கு அமைந்த இடமும் காலமும் பற்றியவை. உரிப்பொருள் விளக்கத்திற்கு அமைந்தது கருப்பொருள். ஆதலால், அவற்றைக் கூறும் ஆசிரியர் முதற்பொருளினும் கருப்பொருளும் கருப்பொருளினும் உரிப்பொருளும் ஒன்றில் ஒன்று சிறந்தது என்கிறார். ஏனெனில், இடம் காலம் சூழல் எனப் பேசுவன எல்லாம் வாழ்வுக்காகவே ஆதலால். இம் முறை வகுப்புத் தாமே கண்டு படைத்து வைத்தது இல்லை என்பதை உறுதியுடன் கூறுகிறார். அது, "பாடலுள் பயின்றவை நாடுங் காலை

என்பது (949).

நிலத்தைக் கூறும் போது நிலத்தின் பெயரை வாளா கூறாமல், அவ்வந் நிலத்தவர் வழிபட்டு வந்த தெய்வப் பெயரையும் சேர்த்தே சுட்டுகிறார்.கருப்பொருள் கூறத் தொடங்கும்போதும், தெய்வம் என்பது