உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருப்பொருள்

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

87

‘கரு’ என்பது ‘கர்’ என்னும் வேர்வழிச் சொல். கருமம் கருவி கருத்தன் என்பவற்றின் மூலமும் கர் என்பதே. கர் என்பது கார், கால், காள், காழ் என்றாகியும் விரிவாக்கம் பெறும்.

கருமை, கருமுகில் வழிப்பட்ட வான் சிறப்பாய், வையகச் சிறப்பு ஆக்குவதாம். அம் மழை இன்றிப் புல்லும் கருக் கொள்ளா என்னின், பிறவற்றைச் சொல்ல என்ன உண்டு?

“மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை’

என்பது குறிப்பு.

"நீரின்றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின்றமையா தொழுக்கு

என்பது வள்ளுவ வான்சிறப்பின் நிறைவு.

வான் ஒழுக்கே (மழையே), வையக ஒழுக்கு (ஒழுக்கம்) மூலம் என்பதை உரைத்தது அது.

ஆறு ஒழுக்கு நெறி வழி என்பன வெல்லாம் ஆற்று நடைக்கும் ஆள் நடைக்கும் உரியவையாக இருத்தலைக் கருதுக. அன்றியும் நீரின் தன்மையே நீர்மை என்பதையும் நீர்மையாவது பண்புடைமை என்பதை யும் உணர்தல் இனிதாம். இனித் தொல்காப்பியர்,

"தெய்வம் உணாவே மாமரம் புள்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப்

எனக் கருப்பொருள் வகைகளைக் கூறுகிறார் (மா=விலங்கு; புள் = பறவை; செய்தி = தொழில்). இவ்வாறு கொள்ளப்படுவன பிறவும் உள; அவற்றையும் கொள்க என்கிறார்.

‘பிறவும்” என்றதனால், தலைமகன் பெயர், தலைமகள் பெயர், நீர், ஊர், பூ, மக்கள் என்பனவற்றை இணைத்துக் கொள்கிறார் களவியல் உரைகாரர்.

வாழ்வியல் ஆசான் ஒருவன் ஞால நூல், கால நூல், திணை நூல் வல்லானாகவும் திகழ்தல் வேண்டும் என்பதைக் கூறாமல் கூறுவது இப்பகுதி என்க.

தெய்வத்தை நினைந்து உயிர்க்கமுதாம் உணவு உண்ணுதல் வழக்கத்தை வெளிப்படுத்துதல் போலத் “தெய்வம் உணாவே” என்றார் என்பதும் எண்ணத்தக்கது. இஃது உலகந் தழுவிய நெறியாதல் அறிக. இதனைச் சுட்டுவார் பேரா. சி. இலக்குவனார்.