உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ்வளம் – 19

என்பார்போல் தொல்காப்பியர் காலத்தில் அறியப்பட்ட ஐவர், தலையாலங் கானத்துச் செரு வென்ற பாண்டியனை எதிரிட்டார் பல்வகையர் ஆதல் போல், அந் நாளில் ஐந்து வகை அரச குடியினர் இருந்தமையால் அவரைக் குறித்தார்.

ஒரே காலத்தில் சேரர் சிலரும், சோழர் சிலரும், பாண்டியர் சிலரும் ஆட்சிக் கட்டிலில் இருந்தமை அறியவரினும், அவர் ஒருகுடியினர் ஆதலின் ஒருவராகவே எண்ணப்பட்டனர். வேளிர் போல்வாரும் அவ்வாறேயாம், ‘பதினெண்குடி வேளிர்' எனல் அறிக.

“இரு மூன்று மரபின் ஏனோர் பக்கம்’

என்பது இவ்விரு வகையினரையும் அல்லாமல், அறுவகைப்பட்ட பிற குடியினர் பகுதி. அவர் “அறுதொழிலோர்" எனத் திருக்குறளில் குறிக்கப் பட்டவராகலாம். அவ்வறு தொழிலோர்,

“உழவு தொழிலே வரைவு வாணிகம்

விச்சை சிற்பம் என்றித் திறத்தறு

தொழில் கற்ப நடையது கரும பூமி" (கரும பூமி = தொழில் உலகம்)

என்று கூறும் திவாகர நிகண்டு.

மேலே குறித்த மூன்று பகுதிகளுடன், குற்றமற்ற செயற்பாடுடைய வரும், இறப்பு நிகழ்வு என்னும் கால அறிவால் எதிரது உணரவல்லவரும், வாழும் நெறிகளை வகுத்துக் காட்டியவரும் ஆகிய அறிவர் பகுதியும், எண்வகை வழக்குடைய துறவர் பகுதியும் (நீராடல், நிலத்திடைக் கிடத்தல், தோலுடுத்தல், சடைபுனைதல் எரியோம்பல், ஊரடை யாமை, காட்டுணவு கோடல், வழிபாடு என்பவை துறவர் எண்வழக்கு என்பார் இளம்பூரணர். உண்ணாமை, உறங்காமை, போர்த்தாமை, வெயிலில் இருத்தல், நீரில் நிற்றல், காமம் கடிதல், வறுமை பொறுத்தல், வாய்மையால் வருந்தல் போல்வன என்பார் நாவலர் பாரதியார்) அறவியல் அறிந்து மறத்திறம் புரியும் போர்வீரர் பகுதியும், அத்தகையதாகிய ஒப்பற்ற பெருமிதப் பகுதியும் கூடிய எழுவகைச் சிறப்பினது வாகைத்திணை என்கிறார் தொல்காப்பியர் (1021) இவை வாகைத் திணையின் வகை.

வாகைத்திணையின் துறைகளைக் 'கூதிர் வேனில் என்றிரு பாசறை' எனத் தொடங்கும் அடுத்த நூற்பாவில் கூறுகிறார் (1022). அத்துறைகளை மற வகை அறவகை என இரண்டாகப் பகுத்து இருபாற்பட்ட ஒன்பதிற்றுத் துறைத்தே (9+9=18) எனக் கூறுகிறார்.

அவற்றுள், எட்டுவகை நுதலிய அவையம் என்பதொரு துறை. அத்தகு அவையமே திருவள்ளுவர் கூறும், பெற்றோர் தம் மக்களை முந்தியிருக்கச் செய்யும் அவையமாகும்.