உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

உள்ளத்து உணர்வைப் புலப்படாது மறைக்க முயன்றாலும் அவ்வுணர்வு ஓங்கிக் கூந்தலை விரிக்கவும், காதணியைத் திருகிக் கழற்றவும், மற்றை அணிகளைத் தடவவும், உடையை மாற்றி உடுத்தவும் ஆகிய மெய்ப்பாடுகள் நான்கும் இரண்டாம் பகுதியாம். இவற்றை, முறையே கூழைவிரித்தல், காதொன்று களைதல், ஊழணி தைவரல், உடைபெயர்த்து உடுத்தல் என்பார் ஆசிரியர்.

ஒடுங்கிய இடையைத் தடவுதல், அணிந்த அணிகளை மீளவும் திருத்தமாக அணிதல், தன் உளத்தில் இல்லாத வலிமையை இருப்பதாகக் காட்டிக் கொள்ளல், கைகள் இரண்டையும் தலைமேல் வைத்து ஆர்வம் காட்டல் என்பவை மூன்றாம் பகுதி. இவை முறையே, அல்குல் தைவரல், அணிந்தவை திருத்தல், இல்வலியுறுத்தல், இருகையும் எடுத்தல்

என்பனவாம்.

தலைமகன் சிறப்பியல்பைப் பாராட்டுதல், அறியாமை நீங்கி அறிவு மேம்படக் கூறுதல், அலர் எனப்படும் இரக்கமில்லாச் சொல்லை ஏற்று நாணுதல், தலைவன் வழங்கும் உடைமுதலியன கொள்ளுதல் என்பவை நான்கும் நான்காம் பகுதி. இவை முறையே, பாராட்டெடுத்தல், மடந்தப உரைத்தல், ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல், கொடுப்பவை கோடல் என்பன.

நெஞ்சங் கலந்த நிலையை இனி மறையாமல் தோழிக்கு வெளிப் படுத்துதலே நலம் எனத் தலைவி எண்ணுதலும், தலைவனைக் கண்டு மகிழ்ந்த மகிழ்வை வளர்க்கும் வகையால் மறுத்தலும், அவன் காணா வகையில் மறைந்து கொள்ளுதலும், ஒருகால் காணுமாயின் மகிழ்தலும் ஆகியவை நான்கும் ஐந்தாம்பகுதி. இவை முறையே, தெரிந்துடம்படுதல், திளைப்பு வினைமறுத்தல், கரந்திடத் தொழிதல், கண்டவழி உவத்தல் என்பன.

தன்னை அழகுறுத்துவார் செயல் கண்டு மனம் வருந்துதல், தலைவனைப் பிரிந்திருக்கும் தனிமையால் வருந்துதல், வருத்தத்தால் கலக்கமிக உரையாடுதல், எதுவும் செய்யமாட்டாத தன்நிலையை உரைத்தல் என்பவை நான்கும் ஆறாம் பகுதி. இவை முறையே, புறஞ் செயச் சிதைதல்,புலம்பித் தோன்றல், கலங்கி மொழிதல், கையறவுரைத்தல் என்பன. அன்பின் ஐந்தணையின் எல்லை கையற வுரைத்தல் என்பதே.

தனிமை மெய்ப்பாடு

தலைவனைப் பிரிந்த தனிமையில் தலைவியின் மெய்ப்பாடுகளாக இருபதை எண்ணுவார் ஆசிரியர்.