உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

163

இன்பம் தருவன வெல்லாம் துன்பம் தருவனவாகத் தோன்றுதலால் அதனை வெறுத்தல், தனிமைத் துன்பம் தாங்காமல் புலம்புதல், உருவெளித் தோற்றம் கண்டு வருந்துதல், கூட்டத்திற்கு இடையூறானவற்றை எண்ணுதல், பசி வருத்தினும் தாங்கியிருத்தல், வண்ணம் மாறுதல், உணவு குறைதல், உடம்புமெலிதல், உறக்கம் கொள்ளாமை, கனவு கண்டு மயங்குதல், மெய்யையும் பொய்யாகக் கொள்ளல், பொய்யையும் மெய்யாகக் கொள்ளுதல், ஐயமுறுதல், தலைவன் உறவினரை விரும்புதல், அறத்தைப் பழித்துரைத்தல், உள்ளகம் உளைதல், எப்பொருளைக் காணினும் அப் பொருளைத் தலைவனொடு ஒப்பிட்டுக் காணல், ஒப்பிய வகையால் உவப்புறல், தலைவன் பெயர்கேட்க அவாவுதல், கலக்கமுறல் என்பவை அவை (1216). இவை யெல்லாம் களவு நிலை மெய்ப்பாடுகள். கற்பு மெய்ப்பாடு

கற்புநிலை மெய்ப்பாடுகளை அடுத்தே கூறுகிறார் ஆசிரியர் (1217, 1218). களவு வழித்தே கற்பு ஆகலின் அவற்றின் இறுதியும் முதலும் இணைத்துக் காண வேண்டியவையாம்.

களவுக் கூட்டத்திற்குத் தடையுண்டாய போது இடித்துரைத்தல் வெறுப்பை மனத்தில் நிலைநிறுத்தல், தமர்க்கும் பிறர்க்கும் அஞ்சுதலால் தலைவனைக் காணாது விலகல், அவன் குறிவருதலை மறுத்தல், தூது சொல்லுமாறு தான் விரும்புவன நோக்கிக் கூறுதல், உறக்கமும் சோர்வு மாக இருத்தல், காதல் மிகுதல், உரையாடாமை என்பவை மனம் அழியாத கூட்டத்திற்குரிய மெய்ப்பாடுகள்.

மேலும், தெய்வத்திற்கு அஞ்சுதல், உயர்ந்த அறம் ஈதெனத் தெளிதல், இல்லாததையும் இட்டுச் சொல்லிச் சினம் கொள்ளல், உள்ளதாம் உயர்வையும் வெறுத்துரைத்தல், இரவு பகலெனக் கூடியிருந்ததை எண்ணி மகிழ்தல், அவற்றை மறுத்திருத்தல், அருள்மிகக் கொள்ளல், அன்புப் பெருக்காதல், பிரிவு தாங்காமை, தலைவனைப் பற்றிப் பிறர் கூறிய பழிச் சொல் கேட்டு வருந்தல் என்பனவும் அவற்றொடு கூடிய மெய்ப்பாடுகளாம். காதலிருவர்க்கும் வேண்டிய ஒப்புமை பத்தும் முன்னே அகத்திணை இயலில் கூறப்பட்டன. அவை, "பிறப்பே குடிமை" முதலியன. ஆகாமெய்ப்பாடு

காதலுக்கு ஆகாத மெய்ப்பாடுகள் இவை என்பதை,

"நிம்பிரி, கொடுமை, வியப்பொடு, புறமொழி,

வன்சொல், பொச்சாப்பு, மடிமையொடு, குடிமை

இன்புறல், ஏழைமை மறப்போடு, ஒப்புமை,

என்றிவை இன்மை என்மனார் புலவர்”

என்றார் (1220).

6