உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

"இனியவருள் எல்லாம் இனியன்; அன்பருள் சிறந்த அன்பன்; பாணனே நீ பரிந்து பேசும் தலைவன் தான் எத்தகையன்? ஊரனாகிய அவன் ஊர்க்குருவியைக் கண்டவன் தானே!

பெட்டைக் குருவி கருக்கொண்டு முட் முட்டையிடப் போகிறது என்பதை முன்னுணர்ந்து இனிய கரும்பின் வெண்பூவைக் கொய்து வந்து முட்டை இட்டு வைத்தற்குரிய ஈன்இல் ஆகிய கூட்டைக் கட்டி முடித்தது” என்பது இப்பாடல் திரட்டுப் பொருள்.

முட்டையிடும் பெட்டை என்று, ஆண்குருவி கூடு கட்டும் ஊரன், கருக் கொண்ட மனைவியை விட்டு விட்டு அயலே போய் விட்டானே ஊர்க் குருவியைக் கண்டேனும் ஊரன் புரிந்து கொள்ளக் கூடாதா? என்பது இதன் உள்ளுறை.

குருவிக் குடும்பத்தைத் தோழி எடுத்துக் கூறியது இயற்கைப் புனைவு மட்டுமே கருதியதா! உட்பொருள் வைத்த உரை கருதியதே அல்லவோ! இறைச்சி

இறைச்சி பற்றிக் காணலாம்:

"இறைச்சி தானே பொருட்புறத் ததுவே

"இறைச்சியில் பிறக்கும் பொருளுமா ருளவே திறத்தியல் மருங்கில் தெரியு மோர்க்கே”

(1175,1176).

என்பவை இறைச்சி இலக்கணம் (1175, 1176).

பொருளியலில் உள்ள இந்நூற்பா விளக்கம், உள்ளுறையின் தொடர்பு கருதி இவண் கூறப்படுகிறது.

இறை கூர்தல், இறைகொண்ட, இறைகொள்ளும் என்பன சங்க நூல்களில் பெருக வழங்குவன.

இறை என்பது தங்குதல். இறை என்னும் அரசுவழிப் பெயரும், கடவுள் வழிப் பெயரும் தங்குதல் பொருளவே.

ஒன்றில் ஒன்று ஒன்றியிருத்தல் இறைச்சியாம். இதனை 'உடனுறை’ என்றது அறிந்தோம்.

மலருள் மணம் போலவும் தேனுள் சுவைபோலவும் ஒன்றி உடனாகி இருப்பது இறைச்சி. கொழுமை தங்கியிருப்பது என்னும் பொருளிலேயே ஊனாகிய இறைச்சியும் பெயர் பெற்றதாகலாம்.

உள்ளுறைக்கும் இறைச்சிக்கும் வேறுபாடு என்ன எனின், உள்ளுறை, உவமையைக் கூறிப் பொருந்திய பிறிதொரு பொருளைப் பெற வைப்பது. அவ்வாறன்றிச் சொல்லிய பொருளிலேயே அதன் குறிப்பாகப் பிறிதொரு பொருளைக் கொள்ள வைப்பது இறைச்சி.