உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

5

“சமய விகற்பம் பற்றிய செய்திகள், சமணம் புத்தம் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் சங்க நூல்களில் இவற்றைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. எழுத்து சொல் ஆகிய அளவில் நில்லாமல் வாழ்வியலாகிய பொருள் பற்றி விரித்துக் கூறும் தொல்காப்பியர் காலத்தில் இவை வழக்கில் இருந்திருந்தால் இவற்றைக் கட்டாயம் சுட்டியிருப்பார். ஆகலின் சமண, பௌத்தச் சமயங்களின் வரவுக்கு முற்பட்டவரே தொல் காப்பியர். ஆதலால் தொல்காப்பியர் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே யன்றிப் பிற்பட்டதாகாது." இக்கருத்துகளைப் பேரா. க. வெள்ளைவாரணரும் (தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம், பக். 87 - 96), பேரா.சி இலக்குவனாரும் (தொல்காப்பிய ஆராய்ச்சி, பக். 12 - 14) விரித்துரைக்கின்றனர்.

சிலப்பதிகாரத்தால் இலங்கை வேந்தன் கயவாகு என்பான் அறியப்படுகிறான். அவன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பர். அச் சிலப்பதிகாரத்தில் 'திருக்குறள்' எடுத்தாளப்பட்டுள்ளது. ஆகலின் திருக்குறள் சிலப்பதிகாரக் காலத்திற்கு முற்பட்டது என்பது வெளிப்படை.. இளங்கோவடிகள் காலத்து வாழ்ந்தவரும், மணிமேகலை இயற்றியவரும், சேரன் செங்குட்டுவன் இளங்கோவடிகள் ஆகியோருடன் நட்புரிமை பூண்டவரும், 'தண்டமிழ் ஆசான் சாத்தன்' என இளங்கோவடிகளாரால் பாராட்டப்பட்டவருமாகிய கூலவாணிகன் சாத்தனார், திருவள்ளுவரைப் 'பொய்யில் புலவன்' என்றும், திருக்குறளைப் 'பொருளுரை' என்றும் குறித்துக் கூறிப் பாராட்டுகிறார். ஆகலின், சிலப்பதிகார மணிமேகலை நூல்களுக்குச் சில நூற்றாண்டுகளேனும் முற்பட்டது திருக்குறள் எனத் தெளியலாம்.

அத் திருக்குறளுக்கு முப்பால் கொள்கை அருளியது தொல்காப் பியம். ‘அறமுதலாகிய மும்முதற் பொருள்' என்பது தொல்காப்பியம். 'இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு' என வருவதும் தொல்காப் பியம். அது வகுத்தவாறு அறம் பொருள் வழக்காறுகள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளதுடன், இன்பத்துப்பாலோ, புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனத் தொல்காப்பியர் சொல்லும் உரிப்பொருள் ஐந்தற்கும் முறையே ஐந்தைந்து அதிகாரங்களாக 25 அதிகாரங்கள் கொண்டு முற்றாகத் தொல்காப்பிய வழியில் விளங்க நூல் யாத்தவர் திருவள்ளுவர். ஆகலின் அத்திருக்குறளின் காலத்திற்குப் பன்னூற்றாண்டு முற்பட்ட பழமையுடையது தொல்காப்பியம் என்பது தெளிவுமிக்க செய்தியாம். திருக்குறள் ‘அறம்' என்று சுட்டப்பட்டதுடன், குறள் தொடர்களும் குறள் விளக்கங்களும் பாட்டு தொகை நூல்களில் இடம் பெற்ற தொன்மையது திருக்குறள். அதற்கும் முற்பட்டது தொல்காப்பியம்.