உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

இனித் தொல்காப்பியத்தில் வரும் ‘ஓரை’ என்னும் சொல்லைக் கொண்டு தொல்காப்பியர் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முயன்றவர் உளர். ஓரை அவர் கருதுமாப்போல 'ஹோரா' என்னும் கிரேக்கச் சொல் வழிப்பட்டதன்று. அடிப்பொருள் பாராமல் ஒலி ஒப்புக் கொண்டு ஆய்ந்த ஆய்வின் முடிவே அஃதாம்.

'யவனர் தந்த வினைமாண் நன்கலம்' இவண் வந்ததும், அது 'பொன்னொடு வந்து கறியொடு (மிளகொடு)' பெயர்ந்ததும், 'யவன வீரர் அரண்மனை காத்ததும்' முதலாகிய பல செய்திகள் சங்க நூல்களில் பரவலாக உள. அக்காலத்தில் அவர்கள் ‘தோகை' 'அரி' முதலிய சொற்களை அறிந்தது போல அறிந்து கொண்ட சொல் ‘ஓரை' என்பது. அச்சொல்லை அவர்கள் அங்கு ‘ஹோரா' என வழங்கினர்.

·

கிரேக்க மொழிச் சொற்கள் பல தமிழ்வழிச் சொற்களாக இருத்தலைப் பாவாணர் எடுத்துக் காட்டியுள்ளார்.

ஓரை என்பது ஒருமை பெற்ற - நிறைவு பெற்ற - பொழுது. திருமணத்தை முழுத்தம் என்பதும், திருமண நாள் பார்த்தலை முழுத்தம் பார்த்தல் என்பதும், திருமணக் கால்கோளை ‘முழுத்தக்கால்' என்பதும், ‘என்ன இந்த ஓட்டம்; முழுத்தம் தவறிப்போகுமா?' என்பதும் இன்றும் வழக்கில் உள்ளவை. முழுமதி நாளில் செய்யப்பட்ட திருமணமே முழுத்தம் ஆயிற்று. இன்றும் வளர்பிறை நோக்கியே நாள் பார்த்தலும் அறிக.

ஆராய்ந்து பார்த்து - நாளும் கோளும் ஆராய்ந்து பார்த்து 'நல்லவையெல்லாம் ஒன்றுபட்டு நிற்கும் பொழுதே நற்பொழுது' என்னும் குறிப்பால் அதனை ஓரை என்றனர். இத்திறம் அந்நாள் தமிழர் உடையரோ எனின்,

"செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்

பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்

வளிதிரிதரு திசையும்

வறிது நிலைஇய காயமும்

என்றிவை சென்றளந் தறிந்தோர் போல,

இனைத்தென்போரும் உளரே”

என்னும் புறப்பாடலை அறிவோர் ஓரையைப் பிறர்வழியே நம் முன்னோர் அறிந்தனர் என்னார். உண்கலத்தைச் சூழ வைத்திருந்த பக்கக் கலங்களை, "நாள்மீன் விரவிய கோள்மீனுக்கு” உவமை சொல்லும் அளவில் தெளிந் திருந்த அவர்கள், ஓரையைப் பிறர் வழியே அறிந்தனர் என்பது பொருந்தாப் புகற்சியாம்.