உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

219

நன்னூலாரைப் புரந்த சீயகங்கன் காலம் கி.பி.13ஆம் நூற்றாண்டு என்பர். எனவே அக்காலத்திற்கு முற்பட்டவர் இளம்பூரணர் என்க. புறப்பொருள் வெண்பா மாலையில் இருந்து இளம்பூரணர் மேற்கோள் காட்டியுள்ளார். ஆகலின் அம்மாலை தோன்றிய 9ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் ஆகிறார் இளம்பூரணர். மேலும் பரணியாற் கொண்டான்,(எழுத்.125, 248) என வருவது கொண்டு கூடல் சங்கமத்துப் பரணி கொண்ட வீரராசேந் திரன் காலத்திற்குப் பிற்பட்டவர் எனத் தேர்ந்து 11ஆம் நூற்றாண்டு என்பர். இளம்பூரணர் சோணாட்டைச் சேர்ந்தவர் என்றும், வேளாண் குடியினர் என்றும் கூறுவர். இவர் சோணாட்டைச் சொல்வதுடன் மலாடு மழநாடு முதலிய நாடுகளையும் சேரமான் மலையமான் பாண்டியன் சேரன் செங்குட்டுவன் முதலிய வேந்தர்களையும் குறிக்கிறார். உறையூரைக் கூறும் இவர் கருவூர், மருவூர், குழிப்பாடி, பொதியில் என்பவற்றையும் குறிக்கிறார். இவர் பார்வை தமிழகப் பார்வையாக இருந்தது மிகத் தெளிவாக உள்ளது. கைவாய்க்கால் என்பது சோணாட்டு வழக்கு; இன்றும் வழங்குவது என்பர். அது பாண்டிநாட்டும் இன்றும் வழக்கில் உள்ளதே. 'கோடின்று செவியின்று' என்பது கொண்டு இந்நாளிலும் அங்கு அவ்வழக் குண்மையைக் குறிப்பர். ஆனால் அதனைக் கூறுமிடத்தேயே (சொல். 276) ‘கோடின்று செவியின்று’

‘கோடில செவியில்’

'கோடுடைய செவியுடைய

'கோடுடைத்து செவியுடைத்து'

என உண்மையும் இன்மையும் அடுக்கிக் கூறுவர். இவரை உண்மைப் பாற்படுத்துவதும், இன்மைப்பாற்படுத்துவதும் வேண்டிற்றன்று. தமிழ்நாட்டு வழக்கு முழுதுற அறிந்த இவர்க்கு எவ்வெடுத்துக்காட்டு முந்து நிற்கிறதோ அதனைக் கூறுவர் எனக் கொள்ளலாம்.

'நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்' எனச் செப்பும் வினாவும் வழுவாது வருவதற்குக் கூறுவதும் (சொல். 13) 'தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார்' என்பதும் (சொல். 33) 'தமிழ்நாட்டு மூவரும் வந்தார்’ என்பதும் (சொ.250) ‘புலிவிற் கெண்டை' என்பதும்(சொல். 411) இளம் பூரணரின் தமிழ் நில முழுதுறு பார்வையையே சுட்டுகின்றன. மேலும், “நாயை ஞமலி என்ப பூழி நாட்டார் என்றக்கால் அச்சொல் எல்லா நாட்டாரும் பட்டாங் குணரார்; நாய் என்பதனையாயின் எவ்வெத் திசை நாட்டாரும் உணர்ப என்பது”, என்று கூறும் இவர் உரையால் (சொல். 392) நாடு தழுவிப் பட்டாங்குணரச் செய்தலே இவர் பெரும் பார்வை என்க.