உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேனாவரையர்

சேனாவரையர் என்பது பட்டப்பெயர். எட்டி, காவிதி என்னும் பட்டங்கள்போல் படைத்தலைவர்களுக்கு அரசால் வழங்கப்பட் பட்டப்பெயர் அது. அதனால் சேனாவரையரின் முன்னோருள் ஒருவர் அப்பட்டப்பெயர் பெற்று விளங்கி அது குடிப்பெயராகப் பின்னர் விளங்கியிருக்க வேண்டும் எனக் கொள்ளலாம்.

அரையர்

=

அரசர்; 'சேனை அரையர்' என்பது சேனாவரையர் ஆயது. சேனைமுதலி, தளவாய் முதலி நாயகர், தலைவர் படையாச்சி (ஆட்சி) என்னும் குடிவழிப் பெயர்களின் வரலாற்றை அறிந்தால் சேனா வரையர் என்பதன் பொருள் தெளிவாகும்.

ஊரும் காலமும்

தூத்துக்குடி திருச்செந்தூர்ப் பெருவழியில் ஆற்றூர் என்றோர் ஊர் உள்ளது. அவ்வூர் பொருநையாற்றின் கரையில் அமைந்தது. அவ்வூரி லுள்ள சோமநாதர் கோயிலில் மாறவர்மன் குலசேகரனின் ஏழாம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டுள்ளது. அதில் ஆற்றூர்ச் சேனாவரையர் தம் முன்னோரிடமிருந்து தமக்குக் கிடைத்த நிலங்களைச் சோமநாதர் கோயிலுக்கு வழங்கிய செய்தி உள்ளது. இக்கல்வெட்டின் காலம் 1276 என்பர். அதனால் சேனாவரையர் பதின்மூன்றாம் நூற்றாண்டினர் என்பது தெளிவாம்.

ஆற்றூர் ஏரல், கொற்கை சார்ந்த ஊர். கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியனைச் சிலம்பு பாடுகின்றது. அக்கொற்கையில் நாணயம் அடிக்கும் அக்க சாலை இருந்தது. இன்றும் அவ்விடம் ‘அக்கா சாலை’ என வழங்குகின்றது. ஆங்கிருந்த கோயில் ‘அக்கசாலை ஈசுவரர் கோயில்’ என்பதை அக்கோயில் கல்வெட்டு கூறுகின்றது. செழிய நங்கை கோயில் என்பதொன்றும் ஆங்குண்டு. அப்பெயர் நெடுஞ்செழியன், வெற்றிவேற்செழியன் பெயர்களை நினைவூட்டுகின்றது.கொற்கை சூழ்ந்த பகுதியில் படைகள் தங்கியிருந்த சான்று காட்டும் ஊர்ப்பெயர்கள் உள்ளன. ஆதலால் அப்படைத் தலைவர் ஒருவர் குடிவழிப் பெயரே சேனாவரையர் என்பதற்குக் கிட்டும் சான்றுகள் இவை எனக் கொள்ளலாம்.