உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

கல்லாடர்

தொல்காப்பியத்திற்கு உரைகண்டாருள் ஒருவர் கல்லாடனார். இவர் சொல்லதிகாரத்திற்கு உரை கண்டுள்ளார். அவ்வுரையும் இடையியல் பத்தாம் நூற்பா உரை தொட்ட அளவிலேயே கிட்டியுள்ளது. எஞ்சியவை கிட்டிற்றில்லை. இவர் “ஒல்காப் புலமைத் தொல்காப்பியத்திற்கு உரை யிடையிட்ட விரகர் கல்லாடர்” என்று பாராட்டப்படுகிறார். கல்லாடம் என்பது பாண்டி நாட்டகத்ததோர் ஊர் என்பது மணிவாசகர் வாக்கால் அறிய வாய்க்கின்றது. “கல்லாடத்தினில் கலந்தினிதருளி” என்கிறது அது. அக் கல்லாடத்துப் பிறந்ததனாலோ, முந்தையோர் பெயர்வழி வந்தமை யாலோ கல்லாடர் என்னும் பெயர் பெற்றார் எனலாம்.

பெயர்

கல்லாடர் என்னும் பெயரால் அறியப் பெறுவார் நால்வருளர். அவருள், சங்க நூல்களால் அறியப்பெறும் கல்லாடர் ஒருவர். அவரே, யாப்பருங்கலவிருத்தியுடையாரால் கபிலர் பரணர் கல்லாடர் மாமூலர் என எண்ணப்படும் வரிசையுடையவர். மற்றொருவர், கல்லாடம் எனப்படும் அகப்பொருள் நூல் அருளியவர். இவ்விருவரினும் வேறொருவரே, தொல்காப்பிய உரையாளர் கல்லாடர். இனித் திருவள்ளுவமாலைக் கல்லாடரோ எனின், பெயர் சூட்டும் அளவில் ஒருவர் இட்டமைத்ததே அப்பெயர் என்க.

காலம்

இக் கல்லாடர் தொல்காப்பிய உரையாசிரியர்களுள் தெய்வச் சிலையார்க்கும் பழைய உரையாசிரியர்க்கும் முற்படவும், மற்றையோர்க் கெல்லாம் பிற்படவும் இருந்தவர் என்பது விளங்குகின்றது. “பெண்மை அடுத்த மகனென் கிளவி” என்பதற்குச் சேனாவரையரைத் தழுவி உரைவரையும் இவர், "நாணுவரை இறந்தாள் தன்மையளாகிப் புறத்துப் போய் விளையாடும் பெண்மகளைப் பெண்மகன் என்பது முற்காலத்து வழக்கம். அதனை இப்பொழுது மாறோக்கத்தார் வழங்குவர். மாறோக்கம் என்பது கொற்கை சூழ்ந்த நாடு” என்கிறார் (167).