உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

249

ஆனால், தெய்வச்சிலையாரோ "விளையாடும் பருவத்துப் பெண்மகளைப் பெண்மகன் என்பது பண்டையோர் வழக்கு” என்கிறார். இதனால் தெய்வச்சிலையார் கல்லாடர்க்குப் பிற்பட்டவராக இருத்தல் வேண்டும் எனக் கொள்ளலாம்.

பிரயோக விவேக நூலார் “மக்கட் சுட்டு என்பதனைக் கல்லாட னாரும் பின்மொழியாகு பெயராய் நின்ற இரு பெயரொட்டுப் பண்புத் தொகை என்பர்" என்று கல்லாடர் பெயரைச் சுட்டிக் கூறுகிறார் (பிரயோக. 22 உரை). ஆதலால் அவர்க்கு முன்னரும் நச்சினார்க்கினியர்க்குப் பின்னருமாம் காலத்தில் அதாவது 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவர் எனக் கொள்ளலாம்.

நாடு

முன்னவர்கள் உரையையே வாங்கிக்கொண்டு எழுதும் இவர் நும்நாடு யாது என்னும் வினாவுக்குப் பாண்டிநாடு என்று விடை கூறுவது கொண்டு பாண்டிநாட்டவர் என உறுதி செய்ய முடியாது எனினும் கல்லாடம் பாண்டி நாட்டகத்ததோர் ஊர் என அறியப்படுதலாலும், மாறோகம் கொற்கைப்பகுதி ஆதலாலும், அதனைச்சுட்டி ‘இப்பொழுது மாறோக்கத்தார் வழங்குவர்’ என்று பாண்டிநாட்டு ஆற்றூர்ச் சேனா வரையர் வழங்குமாறே வழங்குதலாலும் இவர் பாண்டிநாட்டவர் ஆகலாம். சமயம்

ஆறாம் வேற்றுமை பற்றிய நூற்பாவில் வரும் (சொல். 81) நிலை என்பதற்குப் பிறரெல்லாம் சாத்தனது நிலை என்றும் அவரவரது நிலைமை என்றும் கூறினாராகவும், பெரிதும் முன்னையோர் உரையைத் தழுவியே உரை வரையும் இவர் இவ்விடத்தில், "நிலை - பெண்ணாகத்துப் பெருஞ் சங்கரனாரது நிலை. இஃது ஒன்றிய தற்கிழமை" என்று கூறுவது சிவநெறிச் சார்பினர் என்று கொள்ளக்கிடக்கிறது.

சால்பு

இவர் 'இரண்டு வகையாக இலக்கணம் கூறி, “இரண்டனுள் நல்லது தெரிந்துரைக்க” என்பதும் (210), ஒரு காரணத்தைக் கூறி, “பிறிது காரணம் உண்டாயினும் அறிந்திலம்” என்பதும் (222) ஐயமுற்ற இடங்களில் ‘வாராது போலும்' எனப் போலும் வாய்பாட்டால் கூறுவதும் இவர்தம் சால்பினைச் சாற்றுவன.

விருத்தியுரை

எடுத்த பொருளை நன்கு விளக்கிக் கூறுதலில் இவர் பெரிதும் கருத்துச் செலுத்துகிறார். அதனால் இவ்வுரையை விருத்தியுரை எனக் கொண்டமை வெளிப்படுகின்றது.