உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

15

உணர்வு ஒருவர்க்கு உண்டாகுமானால் அவர் தம் மனம்போன போக்கில் எண்ணிக்கை போன போக்கில் கிறுக்கிக் கதையெனவோ பாட்டெனவோ நஞ்சை இறக்கி ‘இளையர்’ உளத்தைக் கெடுத்து எழுத்தால் பொருளீட்டும் சிறுமை உடையராவரா?

தொல்காப்பிய நூனயம் தனியே ஆய்ந்து வெளிப்படுத்தற்குரிய

அளவினது.

தொல்காப்பியக் கொடை

முந்து நூல் வளங்கள் அனைத்தும் ஒருங்கே பெறத்தக்க அரிய நூலாகத் தொல்காப்பியம் விளங்குவதுடன், அவர்கால வழக்குகளையும் அறிந்துகொள்ளும் வண்ணம் தொல்காப்பியர் தம் நூலை இயற்றியுள்ளார். அன்றியும் பின்வந்த இலக்கியப் படைப்பாளிகளுக்கும் இலக்கணப் படைப்பாளிகளுக்கும் அவர் வழங்கியுள்ள கொடைக்கு அளவே இல்லை. தொட்டனைத் தூறும் மணற்கேணியென அது சுரந்துகொண்டே உள்ளமை ஆய்வாளர் அறிந்ததே.

பொருளதிகார முதல் நூற்பா 'கைக்கிளை முதலா' எனத் தொடங்குகின்றது. அக் கைக்கிளைப் பொருளில் எழுந்த சிற்றிலக்கியம் உண்டு. முத்தொள்ளாயிரப் பாடல்களாகப் புறத்திரட்டு வழி அறியப் பெறுவன அனைத்தும் கைக்கிளைப் பாடல்களே.

"ஏறிய மடல் திறம்” என்னும் துறைப்பெயர் பெரிய மடல், சிறியமடல் எனத் தனித்தனி நூலாதல் நாலாயிரப் பனுவலில் காணலாம்.

‘மறம்’ எனப்படும் துறையும் ‘கண்ணப்பர் திருமறம்’ முதலாகிய நூல் வடிவுற்றது. கலம்பக உறுப்பும் ஆயது.

உண்டாட்டு' என்னும் புறத்துறை, கம்பரின் உண்டாட்டுப் படலத்திற்கு மூலவூற்று.

'தேரோர் களவழி' களவழி நாற்பது கிளர்வதற்குத் தூண்டல். ‘ஏரோர் களவழி' என்பது பள்ளுப்பாடலாகவும், ‘குழவி மருங்கினும்’ என்பது பிள்ளைத் தமிழாகவும் வளர்ந்தவையே.

"காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்

சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று மரபின்கல்*

என்னும் புறத்திணை இயல் நூற்பா தானே, சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்திற்கு வைப்பகம்.

பாடாண் திணைத் துறைகள் சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு வழங்கியுள்ள கொடை தனிச்சிறப்பினவாம்.