உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்ததிகார இயலமைதி

தமிழ் முத்தலைவேல் போல முக்கூறுபட்டது. அது, இயல் இசை கூத்து (நாடகம்) என வழங்கப்பட்டது. ஆகலின், முத்தமிழ் எனப்படுவ தாயிற்று.

தமிழின் முதற்பிரிவாம் இயலும் முக்கூறுபட்டு வழங்கியது. அம் முக்கூறும் எழுத்து சொல் பொருள் எனப்பட்டன.

பின்னாளில் இலக்கணம் ஐந்தாகவும் ஆறாகவும் எண்ணப் பட்டவை இம் மூன்றன் விரிவாக்கமேயாகும். இன்னும் விரிவாக்கம் பெறவும் இடம்கொண்டவை இம்முப்பிரிவுகளும்.

ஆசிரியர் தொல்காப்பியர்க்கு முன்னரே எண்ணிலாத் தமிழ் இலக்கண இலக்கிய நூல்கள் விளங்கின. பல்கியும், பலவாகவும் கிடந்த அவற்றைத் தொகுத்து முறைப்படுத்தித் தந்தவர் தொல்காப்பியரே. அச் செயலைக் குறிக்கும் வகையாலேயே தொன்மையான தமிழ் மரபுகளை யெல்லாம் காக்கும் நூல் என்னும் பெயரில் தம் நூலை யாத்து, அதனை யாத்தமையால் தாமும் அப்பெயர் கொண்டும் விளங்கினார். தொல் + காப்பு + இயம் இயம் = பழமையான மொழிமரபு காக்கும் நூல் தொல்காப்பியம் ஆயிற்று.

உலகத் தோற்றத்தில் உயிர்களின் வாழ்விடமாக அமைந்தது மண். மண்வெளிப்பட்டு வாழும் வகைக்குத் தக அமைந்தபின் உயிர்கள் தோன்றின; ஆறாம் அறிவுடைய மாந்தனும் தோற்றமுற்றான். அவன் கூடிவாழும் இயல்புடையவனாக இருந்தமையால் தன் கருத்தைப் பிறர்க்கு அறிவிக்க முயன்றான். அம்முயற்சி முகம் கை வாய் கண் குறிகளாக அமைந்தன. அக்குறிகளின் அளவு போதாமையால் வாய்ச்செய்கை ஒலிகளை மேற்கொண்டு பெருக்கினான். அதுவும் போதாமையால் எழுத்துக் குறிகளை உருவாக்கிப் பெருக்கினான். இவ்வகையால் பொருள், பொருளைக் குறிக்கும் சொல், சொல்லின் உறுப்பாகிய எழுத்து என்பவை முறைமுறையே தோன்றின. அவ்வகையில் பொருள், சொல், எழுத்து எனப் படிமுறையில் அமைந்தாலும் எழுத்து, சொல், பொருள் என்றே அமைந்தன வழக்குற்றன.