உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லதிகார வாழ்வியல் விளக்கம்

திணை

திணை பால் எண் ம் காலம் ஆகிய பொதுவகுப்பு உலகப் பொதுமையது. எனினும் தமிழர் கண்ட திணை பால் வகுப்பு அருமையும் பெருமையும் மிக்கவை. சொல்லதிகார முதலியலாகிய கிளவியாக்க முதல் நூற்பாவே,

“உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே”

என்கிறது.

‘திணை' என்பது திண்மை என்னும் பண்பு வழியில் அமைந்த சொல். திண்மை உடலுக்கும் உளத்திற்கும் உண்டேனும், இவண் உளத்திண்மை குறித்ததேயாம்.

உளத்திண்மையாவது உறுதியான கட்டொழுங்கு. அதனை ஆசிரியர் மேலே விளக்கியுரைப்பார்.

பெண்மைக்குத் திண்மை வேண்டும் என்னும் வள்ளுவம் ஆண்மைக்கு நிறையும் துறவர்க்கு நோன்பும் வேண்டும் என்பதையும் வலியுறுத்தும்.

உயர்ந்த ஒழுக்கம் உடையவர் எவரோ அவர் உயர்திணையர்; அவ்வுயர் ஒழுக்கம் இல்லாரும் மற்றை உயிரிகளும் உயிரில்லாதனவும் அல்திணையாம் (அஃறிணையாம்) என்கிறார் தொல்காப்பியர்.

மக்களெல்லாரும் உயர்திணையர் என்னாமல் உயர் ஒழுக்கம் உடையாரே உயர்திணையர் என்றார், “அவ்வுயர் ஒழுக்கம் இல்லார் மாந்தரே எனினும் அவர்கள் மக்கள் அல்லர்; மாக்கள் எனப்படுவர். விலங்கொடும் இணைத்துச் சொல்லப்படுவர்” என்பதை,

"மாவும் மாக்களும் ஐயறி வினவே”

என்பார் மேலே.

திணை இரண்டும் ஐம்பாலாகப் பகுக்கப்படுதலை அடுத்து உரைக்கிறார் (485, 486).