உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

57

ஆதலால் உம்மை இட்டுச் சொல்லல் வேண்டும். இவ்வளவே என வரம்புடையவற்றை உம்மையிட்டுக் கூறாமை பிழையாகும்.

‘முத்தமிழ் வல்லார்” என்னாமல் ‘முத்தமிழும் வல்லார்’ எனலே

முறை. ஏனெனின் தமிழ் மூன்றே ஆகலின்.

இதனை,

'இனைத்தென அறிந்த சினைமுதல் கிளவிக்கு

வினைப்படு தொகையின் உம்மை வேண்டும்

என்கிறார் (516). எங்குமே இல்லாத பொருளைச் சொன்னாலும் அவ்வாறு உம்மை தந்தே சொல்ல வேண்டும் (517).

எ-டு: “எந்த முயலுக்கும் கொம்பு இல்லை'

அல்லது இல்லது

துவரம் பயறு உள்ளதா என்று ஒரு வணிகரிடம் வினாவினால் உள்ளது எனின் உள்ளது என்பார். இல்லை எனின் இல்லை என்று கூறார். ஆனால், துவரம் பயறு போன்ற ஒரு பயறு வகையைச் சுட்டிக் கூறுவார். பாசிப்பயறு உள்ளது; மொச்சைப் பயறு உள்ளது என்பார்.

இல்லை' என்று சொல்லுதல் தம் வணிக மரபுக்கு ஆகாது என அவர் காண்டுரைக்கும் உரை வழக்கு இன்றும் நடைமுறையில் காண்பதேயாம். இதனை,

"எப்பொருள் ஆயினும் அல்லது இல்எனின்

அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல்'

என்கிறார் தொல்காப்பியர் (618).

இன்னும், ‘இருந்ததுதான்;’ ‘நாளை வரும்' என்பதும் இவ்வழிப்பட் டதே. இல்லை என்பது இல்லை என்னும் மக்கள் வழக்கைச் சுட்டுவது இது.

பெயர்; சுட்டு

ஔவையார் வந்தார்; அவர், அரண்மனையை அடைந்தார். இதில் ஒளவையார் என்பது இயற் பெயர். அவர், சுட்டுப்பெயர்.

இயற்பெயரைச் சொல்லிய பின்னரே பின்னரே சுட்டுப் பெயரைச் சொல்லுதல் வழக்கம். ஆனால், செய்யுளில் சுட்டுப் பெயரை முதற்கண் சொல்லிப் பிற்பட இயற்பெயர் கூறலும் உண்டு.

பெயர்களுள் சிறப்புப் பெயர், இயற்பெயர் என இரண்டும் வருவதாயின் சிறப்புப் பெயரை முற்படக் கூறி, இயற்பெயரைப் பிற்படக் கூறவேண்டும் என்பதும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையாகும்.

எ-டு: ‘தெய்வப் புலவர் திருவள்ளுவர்’