உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

73

உணர்தல்

உள்ளது உள்ளவாறு உணரும் உணர்ச்சி எவர்க்கு உண்டு என்று

வினாவின்,

உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே

என்கிறார் (876).

சொல்லும் பொருளும் சொல்வோன் குறிப்பும் வெளிப்படப் புலப்பட்டு விடுமா? என வினாவின், உணர்வோர்க்கும் உடனே வெளிப் படப் புலப்படுதல் அரிது. ஆனால் அவரே ஆழ்ந்து நோக்கின் பொருள் புலப்படுதல் இல்லாமல் போகாது என்பதை,

"மொழிப்பொருட் காரணம் விழிப்பத்தோன்றா" என்பதனால் தெளிவுபடுத்துகிறார் (877). இது முன்னரும் சுட்டப்பட்டது.

எச்சம்

ஒரு தொகையை ஒருவரிடம் தந்து செலவு கணக்குக் கேட்பார் எச்சம் எவ்வளவு என வினாவுவார். எச்சமாவது எஞ்சியிருப்பது. ஒருவர் தம் வாழ்வின்பின் வைப்பாக வைத்துச் செல்லுவன வெல்லாம் எச்சம் என்பதால்,

"தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தால் காணப் படும்.

என்றார் பொய்யாமொழியார். எச்சம் என்பதற்கு மக்கள் எனச் சொல்லை மாற்றினாரும் பொருள் கண்டாரும் உண்டு. ஆனால் தொல்காப்பிய எச்ச இயல் எஞ்சியது என்னும் தெளிபொருள் தந்து விளக்குகிறது.

இவ்வதிகாரத்தில் சொல்லியவைபோகச் சொல்ல வேண்டி நிற்கும் எச்சத்தைச் சொல்வதால் எச்சவியல் எனப்பட்டது. எச்சம் மக்கள் வாழ்வில் மாறாது வழங்கும் விளக்க மிக்க சொல்லாம்.

நால்வகைச் சொற்கள்

தமிழ்கூறும் நல்லுலகச் செய்யுள் வழக்கிலே பயிலும் சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வட சொல் என நான்காக எண்ணி இயலைத் தொடங்குகிறார்.

தமிழுலகத்து வழங்கும் வழுவிலாச் சொல் இயற்சொல் என்றும், ஒரு பொருள் குறித்த பல சொல்லும் பலபொருள் குறித்த ஒரு சொல்லுமாகிய தமிழ்ச் சொல் திரிசொல் என்றும், தமிழ் வழங்கும் நிலப் பரப்பின் அப்பாலாய் வழங்கிய சொல் திசைச் சொல் என்றும், வடக்கிருந்து வந்து வழங்கிய வேற்றுச் சொல் வடசொல் என்றும் இலக்கணம் கூறினார்.