உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகார இயலமைதி

எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் என்பவற்றைப் போலவே பொரு எதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டிருத்தல் உயரிய கட்டுமுறை யாகும்.

எழுத்து, சொல் ஆகியவற்றைக் கருவியாகக் கொண்டது பொருள். உலகத்துக் காணப்படும் பொருள்களைக் காட்சிப் பொருள் கருத்துப் பொருள் என இருவகைப் படுத்துவர். அவற்றை வாழ்வியல் முறைக்குத் தக முதல், கரு, உரி என மூவகைப்படுத்திக் காண்பது பொருளியல் கண்ட தமிழ் மேலோர் முறையாகும்.

அவற்றை முறையே கூறி, அகவொழுக்க நெறிமுறைகள் ஏழனையும் அதன் சார்புகளையும் அகத்திணை இயல் என்னும் முதல் இயலில் கூறுகிறார். கைக்கிளை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்பன அத்திணைகள். அகத்திணை ஏழானாற் போல அமைந்த புறத்திணை ஏழனையும் புறத்திணை இயல் என்னும் அடுத்த இயலில் கூறுகிறார். அவ்வேழு திணைகளும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பனவாம்.

மூன்றாம் இயலாகக் களவியல் வைக்கிறார். அது அகத்திணைக் கைகோள் இரண்டனுள் முற்பட்டதாம். களவுக் காதல் விளக்கம் கள வொழுக்கம், இயற்கைப் புணர்ச்சி, களவொழுக்கத்தில் தலைவன், தலைவி, தோழி, செவிலி முதலோர் நிலை, இடந்தலைப்பாடு, வரைவு (திருமணம்) என்பவை கூறப்படுகின்றன.

நான்காவதாம் இயல், கற்பியல். அதில், மணவாழ்வு, மணமக்கள் கூற்று, பிறர் கூற்று, அலர், பிரிவு, அறநிலை என்பவை முறையே கூறப்பட்டுள.

கைகோள் ஆகிய களவு, கற்பு என்னும் இரண்டன் தொடர்பாகவும் பிறவாகவும் சொல்ல வேண்டுவனவற்றைச் சொல்லும் பொருளியல் ஐந்தாவதாக இடம்பெறுகிறது. அறத்தொடு நிலை, வரைவுகடாதல், புலனெறி வழக்குகள், தலைவி தோழி முதலோர் பற்றிய சில குறிப்புகள் இதில் உரைக்கப்பட்டுள்ளன.