உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

77

எறும்பு அணில் மலை முதலியவை பேசுவதாகக் கதைகள் உண்டு. இம்முறை உலகளாவியதாகவும் பெருவரவினதாகவும் உள. குழந்தையர் கல்விக்கு ஏற்றது இம் முறை எனப் போற்றவும் படுகிறது இதனைத் தொல்காப்பியர்,

"வாரா மரபின வரக்கூறுதலும்

என்னா மரபின எனக்கூறுதலும்

அன்னவை எல்லாம் அவற்றவற் றியல்பான்

இன்ன என்னும் குறிப்புரை யாகும்

என்கிறார் (என்னா = என்று சொல்லாத).

அடுக்கு

(905)

அடுக்கு என்றாலே ஒன்றற்கு மேற்பட்டது என்பது பொருள். அடுக்குச் சட்டி, அடுக்குப் பானை என்பவை அன்றி அடுக்கு மல்லி அடுக்குப் பாறை என இயற்கை அடுக்கும் உண்டு.

6

பாடலில் இசை கருதி அடுக்கு வரும் எனின், நான்கு முறை அடுக்கலாம் என்றும், விரைவு கருதிய அடுக்கு மும்முறை வரலாம் என்றும் ஓர் எல்லை வகுத்துக் காட்டுகிறார் (906, 907). எந்த ஒன்றிலும் அளவீடு இருத்தல் வேண்டும் என்னும் ஆசிரியர் மொழிக் காவல் நெறி இஃதாம். ஒரு பொருள் இருசொல்

உயர்தலும் ஓங்குதலும் ஒன்று தானே! மீயும் மிசையும் ஒன்று தானே! ஒருபொருள் தரும் இரு சொற்களை இணைத்தல் ஆகுமா எனின் ஆகுமென மக்கள் வழக்குக் கொண்டு தொல்காப்பியர் சொல்கிறார். அது,

"ஒரு பொருள் இரு சொல் பிரிவில வரையார்” என்பது.வரையார் = நீக்கார்,விலக்கார்.

புதுவரவு

பழைய சொற்கள் காலவெள்ளத்தில் அழிந்துபடுவது போலப் புதுப்புதுச் சொற்கள் தோற்றமும் ஆகின்றனவே எனின் வாழும் மொழி என்பதன் அடையாளம் அதுவே என்பர் மொழியறிஞர். இதனைக் “கடிசொல் இல்லைக் காலத்துப் படினே” (935) என்கிறார். கடிசொல் லாவது விலக்கும் சொல் நாட்காட்டி, எழுதுகோல், செய்தித்தாள் என்பன வெல்லாம் காலம் தந்த புதுவரவுகள் அல்லவா! மொழிவளம் செய்யும் சொற்களின் பெருக்கமும் தொடர் வரவுமே மொழிவளம் ஆதலால், அவற்றைப் போற்றிக் காக்க ஏவினார்.