உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

159

57. கொடார்

நல்லுள்ளம் இல்லாத சிலர் தாமும் கொடுக்க மாட்டார்; பிறர் உவந்து கொடுத்தலைக் கண்டு மனம் பொறாது தடுப்பர். இவ்வாறு சிலர் இருத்தலை இரட்டைப் புலவர்கள் எண்ணினர். அவ்வெண்ணம் ஓர் உவமையாக வளர்ந்தது.

"வேலமரம் குறைந்த நிழலுடையது; முள் நிரம்ப வுடையது: நெருங்கியவரைத் தைத்து வலிக்கச் செய்ய வல்லது; அதனை அடுத்து நறுங்கனி உதவும் வாழை பலா முதலியவை நிரம்பிய பழத்தோப்பு இருப்பினும் அங்குப் போய்ப் பயன்கொள்ளா வண்ணம் தடுக்கும் இயல்புடையது. அதுபோல் கீழ்மக்கள் தாமும் கொடார்; சிலராகச் கூடிச் சேர்ந்து பிறரையும் கொடுக்க விடார்" என்னும் பொருளமையப் பாடினர்:

“வெள்ளிலைவேல் அற்பநிழல்; மெத்தவே முள்தைக்கும் துள்ளுநற வாழைபலாச் சோலைக்குள் - மெள்ள அடுக்கஒட்டா வாறுபோல் அற்பர்சிலர் கூடிக் கொடுக்கஒட்டார் தாமும் கொடார்.”

வெள்ளிலை – வெண்ணிற இலை. வேல் - வேலமரம், வெள்வேல். அற்பம் - குறைந்த. துள்ளுநற - தேன் துளிக்கும். அடுக்க ஓட்டா வாறு - நெருங்கவிடாவாறு. கொடுக்க ஒட்டார் - கொடுக்கவிடார்.