உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

62. பிள்ளையார்

ச்

இராமகவிராயர் தொண்டைநாட்டைச் சேர்ந்தவர். அவர் நகைச்சுவை ததும்பப் பாடுதலில் தேர்ந்தவர். ஒருமுறை திருச்சி மலைக்கோட்டை மேலுள்ள உச்சிப் பிள்ளையாரை வணங்கு வதற்குச் சென்றார். சென்ற போது தம் கையில் இருந்த பணத்தை வேட்டியில் முடிந்து வைத்திருந்தார். அவர் அயர்ந்த பொழுதைப் பார்த்து ஒரு திருடன் அதை அவிழ்த்துக்கொண்டு போய்விட்டான். பணத்தைப் பறிகொடுத்த பாவலர் எண்ணம் பிள்ளையார் மேல் திரும்பியது! பிள்ளையாரைப் பார்க்க வந்தபொழுதில் பணம் பறிபோனதால் அப்பிள்ளையாரே தாம் திருட்டுக்குப் பொறுப்பாளர் என்று முடிவு செய்தார். அதனால் நகைச்சுவையுடன் ஒரு பாட்டுப் பாடினார். பணம் பறி போனாலும் பைந் தமிழுக்குச் சுவையான பாடல் ஒன்று வாய்த்தது! போகும் இடங்களிலெல்லாம் புலவர் பறிகொடுத்திருந் தால் புதுப்புதுப் பாட்டுக் கிடைத்திருக்குமே என்று நினைக்க வைக்கின்றது!

“தம்பியோ பெண்திருடி; தாயார் உடன்பிறந்த வம்பனோ நெய்திருடி மாயனாம் - அம்புவியில் மூத்தபிள்ளை யாரே முடிச்சவிழ்த்துக் கொண்டீரே! கோத்திரத்துக் குள்ள குணம்.”

தம்பி - முருகன். பெண் திருடி - வள்ளியைக் களவு நெறியில் திருமணம் கொண்டவர். தாயார் - உமையம்மை. அவர் உடன் பிறந்த மாயன் - கண்ணன். அம்புவியில் - அழகிய உலகில். கோத்திரம் - குடும்பம்.