உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

66. மாசு

ஆனால்

மழை பெய்யுங் காலத்தில் மழை பெய்யவில்லை. ஊரெல்லாம் உழுதொழில் செய்ய முடியாமல் வானத்தைப் பார்த்த வண்ணம் இருந்தனர். சில வேளை களில் மேகம் கூடி நின்று மழை கொட்டிவிடும்போல் தெரியும். பெய்யாமல் போய்விடும். மேகத்தின் இந்த வஞ்சகச் செயலைக் கண்டு ஒரு நீதிபதியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை! மேகத்தைக் கொண்டுவந்து குற்றக் கூண்டில் நிறுத்த முடியுமா? பாட்டிலே நிறுத்தினார் -வேதநாயகம் பிள்ளை என்பவரே அந்த நீதிபதி.

“மேகமே! நீ வேண்டும்போது பெய்யமாட்டாய்; வேண்டாதபோது பெய்வாய்; பரவிச் செல்லும் முகிலே! உனக்கு 'மாசு' என்றொரு பெயரை வழங்கினார்களே முன்னோர்! அவர்களுக்குப் பட்டம் தந்து பாராட்டலாம்! உன் செயல் மாசு (குற்றம்) தானே!”

"வேண்டுங்கால் நீ பெய்யாய் வேண்டாத போதுபெய்வாய் தாண்டுநீ செய்வதெல்லாம் தப்புகளே - நீண்டுலவும் வட்டமுகி லேயுனக்கு மாசெனப் பேர்தந்தோர்க்குப் பட்டமது கட்டுவேன் பார்.”

தாண்டு நீ - ஓடிச் செல்லும் நீ. தப்பு - தவறு. முகில் - மேகம். மாசு

மேகம், குற்றம்.