உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி

199

3. தமுக்கு

தீய பழக்கங்களுள் ஒன்று கோள்சொல்லுதல் என்பது. ஒருவர் மறைவாகச் சொல்லும் சொல் லையோ, ஓரிடத்துக் கேட்ட மறைவான சொல்லை யோ பிறர் பிறர்க்கும், பிற பிற இடங்களுக்கும் பரப்புதல் கோள் சொல்லுதல் ஆகும். 'கோள்' என்பது ‘கொள்வது' ஆகும்.

அவனுக்குத் தெரிந்தால் இதனைத் 'தமுக்கடித்து விடுவான் என்றும், 'தண்டோராப்' போட்டு விடுவான் என்றும் கோள் சொல்வானை ஊரவர் கூறுதல் இன்றும் கேட்கக் கூடியது.

முற்காலத்திலும் சரி, இக் காலத்திலும் சரி, அரசுசார் செய்திகளையோ ஊர்சார் செய்திகளையோ தமுக்கு அடித்தும் தண்டோராப் போட்டும் ஊரறியச் செய்தல் வழக்கமேயாம். அரசியல் செய்திகளில் முதன்மையான வற்றை 'வள்ளுவ முதுமகன்' யானைமேல் இருந்து ஊரவர் அறியப் பறை அறைந்தமையைப் பழைய இலக்கியங்கள் கூறுகின்றன. அரசன் பிறந்த நாளாகிய பெருமங்கல நாள், அவன் திருமண நாள் என்ப வற்றையே அறிவிப்பான் வள்ளுவ முதுமகன் என்றும் கூறும். அதன் வழி வந்ததே தமுக்கடித்தலும், தண்டோ ராப் போடுதலும் ஆம்.

பின்னாளில் அறிவியலால் வந்தது தொலைவரிச் செய்தி. அதனைத் ‘தந்தி’ என்றும் 'கம்பியில்லாத் தந்தி' என்றும் கூறுவதும் வழக்கத்தில் உள்ளது. எங்கிருந்தோ வரும் செய்தி எங்கோ அறியப்பட்டு ஊர் அறிபொருளாக ஆகிவிடுதலால் அவ்வாறு ஊரறியச் செய்வாரைத் 'தந்தி' என்று கூறுவதும் வழக்காம்.

மகவைத் தந்தவர் தந்தையாவதுபோல், செய்தியைத் தந்தவரைத் ‘தந்தி’ எனப் பெயரிட்டுப் பொருந்த வழங்கினர் பொதுமக்கள்.