உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயூரம் வேதநாயகம் பிள்ளை

87

புனைகதைகளின் தந்தை வேதநாயகர் என்று சொல்லத் தக்க பெருமையை இந்நூல்கள் வழங்கின.

சமய நூல்கள் : வேதநாயகர் கிறித்தவர்; இறைவன்மேல் ணையற்ற அன்பு உடையவர்; திருவருள் மாலை. திருவருள் அந்தாதி,தேவமாதா அந்தாதி, தேவதோத்திர மாலை, சருவ சமய சமரசக் கீர்த்தனை என்னும் சமயச்சார்புடைய நூல்களை இயற்றியுள்ளார். சருவ சமய சமரசக் கீர்த்தனைகள் தமிழ் இசைக்கு வேதநாயகர் செய்துள்ள தொண்டை மலைமேல் விளக்கெனத் தெளிவாகக் காட்ட வல்லன. இராகமும், தாளமும் வகுத்து இசை நலம் துலங்கப் பாடப் பெற்றவை அவை.

பெண்ணலன் பேணும் நூல்கள் : அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்னும் கருத்து வேதநாயகர் காலத்தில் இருந்தது. அந்நாளில் பெண்களைப் பற்றி விரிவாகவும், அழுத்தமாகவும் உரைத்தார் வேதநாயகர். பெண் கல்வி, பெண் மானம், பெண்மதிமாலை ஆகிய நூல்களை இயற்றினார். சருவ சமய சமரசக் கீர்த்தனைகளிலும் பெண் கல்வி, திருமணம், இல்லறம் ஆகியவை பற்றி இனிய பல பாடல்களை இயற்றினார். மாயூரம் நகரவைத் தலைவராக இருந்தபோது பெண் கல்வி வளர்ச்சியில் பேரூக்கம் காட்டினார்.

மொழி பெயர்ப்பு நூல்கள் ஆங்கிலத்தைத் தமிழாக்கம் செய்வதில் தேர்ந்தவர் வேதநாயகர். அத்திறமை வீண்பட்டு விடாமல் 1805ஆம் ஆண்டு முதல் 1861ஆம் ஆண்டு முடிய உள்ள சதர் கோர்ட்டு முடிவுகளைத் திரட்டி மொழிபெயர்த்துச் சித்தாந்த சங்கிரகம் என்னும் பெயரால் வெளியிட்டார். பின்னர் 1862-63 ஆம் ஆண்டுத் தீர்ப்புகளைத் தமிழாக்கி 1864-இல் ல் வெளியிட்டார். சட்ட விவரங்களைப் பற்றிய தமிழ் முதல் நூல் வேதநாயகர் இயற்றிய சித்தாந்த சங்கிரகமேயாகும்.

வேதநாயகர், தமிழ்மொழி அதற்கு முன் காணாத புதுப் புதுத் துறைகளில் புகுந்து தொண்டாற்றினார். அவரைப் போன்ற நன்மக்கள் பெருகும் அளவுக்கே ஒரு மொழி எய்தும் ஏற்றம் கணிக்கப்படும்! அத்தகு ஏற்றம் தரும் ஏந்தல்கள் வாழ்க!

“பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்

மண்புக்கு மாய்வது மன்.”

a b