உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. வேதநாயகர் இயற்றிய நூல்கள்

வேதநாயகர் ஆங்கிலம் தேர்ந்த அறிஞர்; மொழி பெயர்ப்பாளர்; தமிழ்க் கவிஞர்; உரைநடை வளர்ச்சிக்கு வித்திட்டவர்; நீதிபதி; நகரத் தந்தை; பன்னூல் ஆசிரியர்; சீரிய சிந்தனையாளர்; தெய்வப் பற்றாளர்; சமயப் பொதுமை மல்கியவர்; இத்தகைய தன்மைகள் அனைத்தும் சேர்ந்திருந்த வேதநாயகர் நூல்கள் எத்தகு சிறப்புக்குரியன என்பதைச் சொல்லவேண்டுவதில்லை.

வேதநாயகர் இயற்றிய நூல்களை நீதி நூல்கள், புனைகதைகள், சமய நூல்கள், பெண்ணலன் பேணும் நூல்கள், மொழி பெயர்ப்பு நூல்கள் எனப் பகுக்கலாம். அவற்றைப் பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.

நீதி நூல்கள் : ஆத்திசூடி முதல் திருக்குறள் இறுதியாக நிரம்பிய நீதி நூல்களைத் தன்னகத்துக் கொண்டது தமிழ் இலக்கியம். அதற்கு மேலும் சிறப்பு உண்டாக்கும் வகையில் வேதநாயகரால் தோற்றுவிக்கப் பெற்றது 'நீதி நூல்' என்னும் பெயருடைய நீதிநூல் ஆகும். நீதிநூல் எளிய இனிய பாவகையால் அமைந்தது. மாந்தர் நல்வாழ்வுக்கு இன்றியமையாத நற்கருத்துக்களையெல்லாம் ஒருங்கு திரட்டிய நீதிக்களஞ்சியம். அஃது எனின் புகழ்ச்சி அன்றாம். மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை முதலிய புலவர்கள் 56 பேர்கள் சிறப்புப்பாயிரம் வழங்கியுள்ளனர்! வடலூர் வள்ளலார் பாராட்டும் அந் நூற்கு உண்டு எனின் அதன் சிறப்பை விரித்துரைக்க வேண்டுவதில்லை; நானூறு பாக்களைக் கொண்டது நீதி நூல்.

புனைகதைகள் : சிறு கதைகளும் தொடர்கதைகளும் இந்நாளில் பெருகி வருகின்றன. ஆனால் ஏறத்தாழ நூற்றாண்டு கட்கு முன்னர் அத்தகு நூல்கள் தமிழில் தோன்றவில்லை. பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் பெயரால் நகைச்சுவையும், நல்லொழுக்கப் படிப்பினையும் மிக்க நூலை 1876ஆம் ஆண்டிலேயே வேதநாயகர் இயற்றி அச்சிட்டார். 1887 ஆம் ஆண்டில் சுகுண சுந்தரி என்னும் நூலை இயற்றினார். தமிழ்ப்