உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

தாமோதரர் பிறப்பால் ஈழத்தமிழர். ஆனால், அவர்தம் கல்வி வாழ்வு தொண்டு ஆகியவை பெரிதும் தமிழக மண்ணிலேயே நிகழ்ந்தன.

ஈழத் தமிழ்மண், தமிழகத் தமிழ் மண்ணுக்கு நல்லபல கொடைகளை வழங்கியுள்ளது. அவற்றுள் தாமோதரக் கொடை சுட்டத் தக்க பெருமையுடைய தாகும். தாமோதரர் பதிப்பின் ஏந்தல்.

தாமோதரர், பதின்மரொடு பதினொன்றாமவராகப் பதிப்புப் பணியில் எண்ணத்தக்கார் அல்லர்! அவர் பழந்தமிழ்ப் பதிப்பின் முன்னவர், முதல்வர், மூலவர்!

தாமோதரர்க்கு முன்னவர், ஈழக் கொடையாம் ஆறுமுக நாவலர். ஆனால், அவர்தம் தொல்காப்பியப் பழம்பதிப்பு தாமாதரர் தூண்டலால் துலங்கியதேயாகும்!

தொல்காப்பியம் வழக்குக் குன்றியிருந்த காலம்; ஏடும் அகப்படாநிலை; கற்றாரும் அரியரெனின் கற்பிப்புக் கடமை எப்படி நிகழ்ந்திருக்கும்? அந்நிலையில் தொல்காப்பியத்தைப் பகுதி பகுதியாக வெளியிட்டு, முழுமையாக உயிருலாக் கொள்ள வைத்தவர் தாமோதரரே.

தாமோதரர் தமிழ் நன்கு கற்றவர்; கற்பித்தலும் செய்தவர்; தமிழ்ப்பற்றாளர். பணிநிலையில் தமிழ்ப் பணியே செய்யும் தொழிலை மேற்கொண்டாரல்லர். வரவு செலவுத்துறை, முறைமன்றத் துறை ஆகியவற்றில் பதிந்தவர். அவர் தமிழ்ப் பதிப்பிலே பதிந்தார். வியத்தகு விந்தையாகும் அது!

பிறர் பதிப்பித்தவற்றைப் பதித்தாரல்லர்! பிற்கால இலக்கியமும் பதித்தார் அல்லர்! பழந்தமிழ்த் தொல்காப்பியம் இலக்கியமா? இலக்கண நூல்! அதனைப் பதிப்பித்தல் முறையெனத் தேர்ந்தார் முறைமன்றங் கண்ட தாமோதரர்! சூளாமணி என்ன, இலக்கண விளக்கம் என்ன, வீரசோழியம் என்ன, கலித்தொகை என்ன இன்ன நூல்களைப் பதிப்பித்தார்.