உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

ஏன் பதிப்பித்தார்? உயிர் போய்விடும் ஏட்டைக் கண்டார் உருகினார்! உயிர்போகத் தக்க ஏட்டைக் கண்டும் கொண்டும் உயிர் வாழும் தமிழ்ப்புலவர்கள் உருகிப் பதிப்பிக்கும் தொண்டு கொள்ளாமையையும் கண்டார். அவற்றை அச்சேற்றிக் காத்தல் தலைக் கடன் எனப் பணிபூண்டார். உருகிய தாமோதரர் உள்ளம், உருக்காகிச் செய்த செயன்மை இது!

தாமோதரனார் வரலாற்றுச் சுருக்கம் இச்சுருக்க நூலில் உண்டு. 'எடுத்தோம் முடித்தோம்' என்றிருக்க வேண்டுமெனக் கதையுலகமே போய்க்கொண்டு ஒரு பக்கக் கதையிலும் துணுக்கிலும் உலா வருகின்றது. ஆய்வு நூல், அளவால் பெருகின் பயில்வார் அரியரே யல்லரோ! இச் சுருக்கநூலில் வரலாற்று இணைப்புகள் உண்டு; பதிப்புக்கலைச் செய்திகள் உண்டு; ஆய்வுப் பகுதியும் உண்டு. "தம்பிடிக்குக் குதிரை வாங்கவும் வேண்டும்; தட்டிவிட்டால் பறக்கவும் வேண்டும்!'

பழந்தமிழ்ப் பதிப்பின் முன்னோடி தாமோதரர். 'பழந்தமிழ் நூற்பேழை'த் திட்டம் கண்டு செயற்படுத்தியது தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். அக் கழக வழியே பழந்தமிழ் காத்த தாமோதரர் வரலாறு வெளிப்படுத்தல் பெருந்தக வுடையதாகும். அதனை மேற்கொண்டு உதவும் பெருமகனார் கழக ஆட்சியாளர் பைந்தமிழ்ச்சீர் பரவுவார் ஆகிய திருமலி இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் ஆவர். அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியுடையேன்.

பாவாணர் ஆய்வுநூலகம், திருநகர், மதுரை-6.

தமிழ்த் தொண்டன், இரா.இளங்குமரன்,

30-4-91