உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

99

தமிழாசிரியராகத் தாமோதரரை அமர்த்த அரசு விரும்பியது. அவ்வாறே அமர்த்தமும் பெற்றார். அக் கல்லூரிப் பணியில் இருக்கும் போது சென்னைப் பல்கலைக்கழகம் உருவாயிற்று. அதனால் அப்பல்கலைக் கழகத் தேர்வு எழுத அவாவினார் தாமோதரனார். அதனால் 1857 இல் பல்கலைக் கழகம் முதன் முதலாக நடாத்திய நுழைவுத் தேர்விலும், அதன் பின் அடுத்தே நடந்த இளங்கலை (பி.ஏ.) தேர்விலும் சிறந்த வெற்றி பெற்றார். அவ் வெற்றி கள்ளிக்கோட்டை அரசுக் கல்லூரித் துணையாசிரியராம் உயர்வைத் தாமோதரர்க்குத் தந்தது. அக்கல்லூரிப் பணியில் தாமோதரர் காட்டிய திறமை சென்னை அரசு வரவு செலவுக் கணக்குத் துறை அலுவலராகும் வாய்ப்பை வழங்கிற்று.

மணவாழ்வு:

கல்வியாலும் பதவிகளாலும் சிறப்புற்று வந்த தாமோதரர் 'அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை’; ‘அறத்தான் வருவதே இன்பம்' என்பவற்றை உணர்ந்து யாழ்ப்பாணம் தெல்லியம்பதி காலிங்கராயர் வழிவந்த வள்ளியம்மையை மணம் புரிந்தார். இருமகவுக்குத் தாயாகிய பிள்ளை வள்ளியம்மை இயற்கை எய்தவே, அவர் உடன்பிறந்தாராகிய முத்தம்மாள் என்பாரை மணந்தார். அவர் வழியாக மக்கள் அறுவர் பிறந்தனர். மனைவியர் இருவர் வழியும் மக்கள் எண்மர் பிறந்தனர். எனினும், அவருள் நெடுவாழ்வு கொண்டவர் ஒருவரே ஆவர். அவர் சி. தா. அழகு சுந்தரம் என்பார், ஏனையோர் எழுவரும் பிள்ளைப்பருவம், காளைப் பருவம், திருமணம் முடித்த சில்லாண்டுகள் என்னும் நிலையில் முப்பது அகவைக்குள்ளாகவே முடிவு கண்டவர்கள் ஆயினர். இரண்டாம் மனவிையரை இழக்கும் நிலையும் உண்டாயிற்று. இவை தாமோதரர் உள்ளத்தை அசைத்தன, உருக்குலைத்தன. எனினும், அவர் தம் ஊற்றம் 'ஆற்றுவார் மேற்றே பொறை' என்று கொண்டு தாங்கியது.

குடும்பச் சுமை :

தாமோதரர் தம் தந்தையாரை இளம்பருவத்திலேயே இழந்தவர்; குடும்பத்தில் தலைமகனாராகத் தோன்றியவர், அதனால், கறையானால் அரிக்கப்பட்ட அடிமரம் வீழ்ந்துவிட்ட போதில் அதன் விழுதால் தாங்கப்படும் ஆலமரம்போலத் தாமோரர் தம் பெரிய குடும்பப் பொறையைத் தாங்கும் கடப்பாட்டில் தலைப்பட்டு நிற்கும் கட்டாயத்திற்கு ஆட்பட்டு அதனைச் செம்மையாகச் செய்து முடித்தவரும் ஆவர். அப் பயிற்சியும் உள்ள உறுதியுமே தம் தனிக் குடும்ப இழப்புகளையும், பொறுப்புகளையும் தாங்கும் உறுதியைத் திடமாகத் தந்தது என்க.