உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வரலாற்று இணைப்பு 1

பரிதிமாற்கலைஞர் (வி.கோ. சூரிய நாராயண சாத்திரியார்)

தாமோதரனார் சென்னையில் வாழ்ந்த காலத்தில் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர் பரிதிமாற் கலைஞர் எனப்படும் சூரியநாராயண சாத்திரியார். அவர் கிறித்தவக் கல்லூரியிலேயே இளங்கலை பயின்றவர். அப்பயிற்சி நிறைந்த அளவில் அவர் எழுதிய தேர்வில் தமிழ்ப் பாடத்தில் மாநில முதல்வராக வெற்றி பெற்றார். அத்தகு முதன்மையரை ஆண்டுதோறும் அழைத்துத் தாமொரு தேர்வு நடாத்திப் பரிசும் பாராட்டும் வழங்குதலைக் கடமையாகக் கொண்டிருந்தார் தாமோதரர்.அம் முறைப்படி பரிதி மாற்கலைஞரைத் தம்மிடத்து அழைத்தார் தாமோதரர்.

பரிதி எப்பொழுதும் தூய தமிழில் உரையாடும் வழக்கம் கொண்டவர். அம் முறைப்படியே வினாவிய வினாக்களுக்கும், தாமே உரையாடியவற்றுக்கும் செந்தமிழே இயல்பான மறு மொழியாய்ப் பரிதியாரிடத்திருந்து வரக்கண்ட தாமோதரர் வியப்புற்றார். தாம் வினாவிய வினாக்களுக்கு ஒருமணிப் பொழுதில் விடை எழுதித் தரப்பணித்தார். அதனையும் அரை மணிப் பொழுதிற்குள்ளாகவே நல்ல தமிழில் விடை எழுதி முடித்தார். பேச்சைப்போலவே எழுத்தும், எழுத்தைப் போலவே பேச்சும் ஒன்றுபட்டுத் திகழும் பரிதியை மிகப் பாராட்டித் தாம் பதிப்பித்த நூல்களுள் ஒவ்வொரு படி வழங்கிப் பாராட்டினார். அப் பாராட்டில் பரிதியைத் 'திராவிட சாத்திரி' என்று நும்மைச் சொல்வது சாலப் பொருந்தும் என்றார். அதன்மேல் தாமோதரனார் பரிதியாரைத் 'திராவிட சாத்திரி' என்றே வழங்கினார். முதற் சங்கரர் திருஞான சம்பந்தரைத் 'திராவிட சிசு' என்று கூறியதை நினைவூட்டும் செய்தி ஈதாகும்.

வெனிசு வாணிகன் என்னும் ஆங்கில நூலின் ஒரு பகுதியைத் தந்து தமிழ்ப்பாடலாக்கித் தருமாறு கோரினார் தாமோதரர், பரிதியாரிடம். அதனைத் தமிழ்ப்பாடலே என்னுமாறு விரைந்து பாடித்தந்தார் பரிதியார். அதனைக் கண்டு