உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சண்முகனாரின் முன்னோர்

சோழவந்தான் மண்ணை நினைக்கும்பொழுதே தமிழுணர்ச்சி உந்தி எழுகின்றது. அவ்வாறு உந்தியெழக் காரணமென்ன? ஒரே ஒரு தமிழ்ச் சண்முகனார் ஆங்குத் தோன்றியமைதான்.

66

காடாகலாம் - அன்றி - நாடாகலாம்; மேடாகலாம் அன்றிப் பள்ளமாகலாம்; இவை சிறப்புடைமை ஆகா ஓரிடத்திற்கு. ஆண்மையாளர் ஆங்குத் தோன்றியுளரா? உளரேல், அவ்விடம் நல்லிடம்! இன்றேல் இல்லை! இடத்தின் சிறப்பியல் அவ்விடத்து வாழ்நரைப் பொறுத்ததே."" இவ்வாறு உரைத்தார் அவ்வையார். தக்கவோர் சான்றானார் தமிழ்ச் சண்முகனார்.

சோழவந்தான் வளம்

சோழவந்தான் மண்ணுக்கு இயற்கைக் கொழுமை உண்டு. “வான்பொய்ப்பினும் தான் பொய்யாக்”2 காவிரி புரக்கும் நாடு சோழநாடு. அந்நாட்டின் வேந்தனே, 'சோழவந்தான்' வயல் வளத்தினைக் கண்டு உவந்து பாராட்டினானாம்! சோழன் உவந்து பாராட்டினான் ஆகலின், "சோழன் உவந்தான்" என்னும் பெயர் பெற்றுப் பின் நாளில் சோழ வந்தான். ஆங்குச் சோழன் வந்தான் ஆதலின் அப்பெருமை நோக்கி அவ்வூர் சோழ வந்தான் ஆயிற்று என்றுரைப்பதும் உண்டு. காரணங்கள் ஊரின்பெயரைக் கொண்டு இட்டுக்கட்டப் பெற்றவையே இவை. இட்டுக்கட்டப் பெற்றவையே எனினும், சோழவந்தானுக்கு நீர்வளம் சான்ற நிலவளம் உண்டு. வையை என்னும் பொய்யாக் குலக்கொடி தன் சீர்கெழு மகவுகளுள் தலைமகவாய்ச் செந்தண்மை கொண்டு சோழ வந்தானைக் காத்து வருகின்றமை கண்கூடு.

493

1. புறநானூறு 188.

2.பத்துப்பாட்டு, பட்டினப்பாலை 5.

3.சிலப்பதிகாரம், புறஞ்சேரியிறுத்த காதை 170